Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts


Iconoclast.

பொதுவாக, தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் நம்பிக்கைகளையும், தனிநபர் வழிபாட்டையும் உடைக்கும் ஒரு நபரே Iconoclast. அதாவது, கலகக்காரர். யார் வேண்டுமானாலும் Iconoclast ஆகி விட முடியாது. இந்தியாவில், தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கேள்விகேட்டு உடைத்து, அறிவை உபயோகித்து எது நல்லது எது கேட்டது என்று தரம்பிரித்து அறியும் திறன் உள்ள ஒருவனே Iconoclast ஆக முடியும். எத்தனை மாட்டுத்தனமான சிந்தனைகள் நம்மீது திணிக்கப்படுகின்றன இங்கே ! கலாச்சார ரீதியாக எந்த வகையிலும் ஒரு தனிமனிதன் நல்லறிவைப் பெற்றுவிடக்கூடாது என்றே இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் - மீடியாவும் அரசும் மதமும் கட்சிகளும் இயங்குகின்றன. இவற்றைத் தாண்டி ஒரு மனிதன் சிந்தனை விடுதலை அடைவது மிகக்கடினம் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தில் சினிமா நடிகர்களே கடவுள்கள். ஒன்றுக்கும் உதவாத ஊழல் அரசியல்வாதிகளே தலைவர்கள். குப்பையான pulp நாவல்களே இலக்கியங்கள். தொலைக்காட்சியில் வரும் படு அசிங்கமான நிகழ்ச்சிகளே பொழுதுபோக்கு. ஏன் இப்படி இருக்கிறது? உலகெங்கும் உள்ள நல்ல புத்தகங்கள், சிறந்த திரைப்படங்கள், தலைசிறந்த நடிகர்கள் ஆகிய எதுவும் இங்கே உள்ளே நுழைய முடியாத சூழல். தமிழகத்தின் பெரும் பொறுப்புகளில் இருக்கும் மனிதர்களே படுமட்டமான ரசனையை உடையவர்களாகத் திகழ்கின்றனர். அப்படி இருக்கையில், இவர்கள் எங்கே நல்ல விஷயங்களைப் பரிந்துரைக்கப்போகிறார்கள்?

ஆகவேதான் நம்மால் வழிவழியாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளையும் ரசனை முறைகளையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். நமது மதம் இப்படிச் செய்யச் சொல்கிறதா? கேள்விகளைக் கேட்போம். ஏன் இப்படி நடக்கிறது என்று வினவுவோம். நமது மதம், குறிப்பிட்ட ஜாதியினரை அசிங்கம் என்று சொல்கிறதா? அந்த மத விதிகளை உடைப்போம். கேள்வி கேட்போம். பொதுவில், மனித ரசனை இங்கே மலையளவு மாறவேண்டியிருக்கிறது. இன்னமும் ராஜேஷ் குமார் போன்றவர்களையே சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் கும்பல்தான் இங்கே அதிகம். பாலச்சந்தரே உலக இயக்குநர். கமல்ஹாசன் உலக நாயகன். இங்கே அடிமட்ட ரசனையைப் பரப்பும் எவராக இருந்தாலும், இப்படி 'உலக' என்று ஆரம்பிக்கும் ஒரு பட்டம் அவர்களுக்குத் தமிழகத்தின் ஆட்டுமந்தைகளின் சார்பில் வழங்கப்படுகிறது. பட்டம் கிடைத்ததும், அவர்கள் கடவுளர்களாக மாறிப்போனதொரு மனநிலையில் ஊறித்திளைத்து, தங்களது வழிபாட்டு முறைகளை மக்களுக்கும் எடுத்து இயம்புகின்றனர். எவ்வளவு அசிங்கம் இது !

அரசியலை எடுத்துக்கொண்டால், மக்களால் வழிபடப்பெறும் அரசியல்வாதிகளின் ரசனை எந்த நிலையில் இருக்கிறது? மானாட மயிலாட நிகழ்ச்சியைப் பரிந்துரைத்து, மக்களின் சுயமைதுன முயற்சிக்குப் பெரிதும் உதவிபுரிவதே இந்த அரசியல்வாதிகளின் முழுநேர வேலையாக இருக்கிறது. நடிகர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்?  உடன் வேலை செய்யும் நடிகர்களை 'சார்... சார்' என்று அழைப்பது; அவர்களின் கால்களை நக்குவது; உலகத்தில் உள்ள அயோக்கியத்தனம் முழுவதையும் செய்வது; போர் அடித்தால் கட்சி ஆரம்பித்து விடுவது. என்ன நடக்கிறது இங்கே? எந்த நடிகராவது, இயக்குநராவது, தயாரிப்பாளராவது, நடிகையாவது இதுவரை தங்களின் ரசிகர்களை நல்ல ரசனையின்பால் திருப்பியிருக்கிறார்களா? கேடுகெட்ட  மொக்கைத் திரைப்படங்களே இவர்களது பார்வையில் உலகப்படங்களாக  இருக்கின்றன.

நல்ல புத்தகங்கள் எத்தனை இருக்கின்றன தமிழகத்தில். எந்த அரசியல்வாதியாவது இவற்றைப் பற்றிப் பேசி மக்களின் ரசனை முன்னேறுவதற்கு முயற்சித்திருக்கிறார்களா? இல்லையே. கருணாநிதியின் புத்தகங்களே இலக்கியம்.

இப்படித் தமிழகத்தின் கலைச்சூழல் அசிங்கப்பட்டுப் போயிருக்கும் நிலையில், நல்லவற்றைத் தேர்ந்தெடுப்பது, மக்களாகிய நமது கையில்மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் அனைவருமே Iconoclast  களாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தால் மட்டுமே மீடியா மற்றும் சமுதாயம் நம்மீது விதிக்கும் விதிகளை உடைக்க முடியும். நல்ல குடிமகனாகவும் வாழ முடியும். எதையும் எதிர்த்துக் கேள்வி கேளுங்கள் நண்பர்களே. சமூக நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் உடையுங்கள். 'தமிழனுக்கு வழிபடுவதற்கு இரண்டு செருப்புகள் எப்போதும் தேவை. செருப்பை அணிபவர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்' என்று ஒரு சொலவடை உண்டு. அதை உடைப்போம். தமிழகத்தில்  வழிபடப்பெறும் ஸ்தானத்தில் இருக்கும் 'கடவுள்களை' உடைப்போம். கடவுளை உடைப்போம் என்றால் , உடனே சிலைகளை உடைப்பது அல்ல பொருள். அப்படி மக்களால் போற்றப்பட்டு, வழிபடப்பெற்றுக்கொண்டிருக்கும்  போலிகளின் மீதான நம்பிக்கையை உடைப்போம்.


ஒரு தனிமனிதனின் ரசனை மாறினால், அவனது வாழ்வு மேம்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சமுதாயம் தன்மீது திணிக்கும் மூடநம்பிக்கைகளை முதலில் அந்த மனிதன் தூக்கி எறிந்தாலே, அவனது ரசனை வழியை அடைத்துக்கொண்டிருக்கும் தடைகள் உடைந்துவிடும். குமாஸ்தா மனநிலை என்று ஒன்று உண்டு. மிகப்பெரும் செல்வந்தனாக ஒருவன் இருக்கலாம். ஆனால், அவனது மனதில், இன்னும் ஒரு குமாஸ்தாவின் மனநிலையை ஒத்த சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கும். அவனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாதவாறு இந்தச் சிந்தனைகள் அவனைத் தடுக்கும். அந்தக் குமாஸ்தா மனநிலை முதலில் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்.

குமாஸ்தாவாக யாரும் இருக்கலாம். அது அவரது உரிமை. ஆனால், குமாஸ்தா மனநிலையோடு இருந்துகொண்டு சகமனிதனுக்கு ஊறு விளைவிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை அல்ல. ரசனை மாறினால் ஒழிய, இந்த குமாஸ்தா மனநிலை நம்மை விட்டுப்போகாது.

எனது அனுபவத்தில், பலரைப் பார்த்திருக்கிறேன். ஆள் பெரிய வேலையில் இருப்பார். ஆனால், மனதில், தனது ஜாதியும் சமூகமும் தன்மீது அமுக்கிய அத்தனை சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு, எப்போதடா அடுத்தவன் மீது திணிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். அதாவது, தான் நினைக்கும்படிதான் அடுத்தவன் வாழ வேண்டும் என்று ஒரு சர்வாதிகார சிந்தனை அவர்களிடத்தில் இருக்கும். இவர்களிடம் அதிகாரம் வந்தால், இவர்களின் எண்ணத்துக்கு மாறாக நினைப்பவர்கள் காலி. நரேந்திர மோடி போல. அண்ணா ஹசாரே போல. ஹிட்லர் போல. எத்தனை பேர் இன்னமும் நம் நாட்டில் நரேந்திர மோடியை துதிபாடிக்கொண்டிருக்கிறார்கள்?


இந்தச் சூழ்நிலையில்தான் பெரியார் போல ஒரு Iconoclast  நமக்குத் தேவை. பெரியாரைப் பார்த்தால், நாட்டில் பின்பற்றப்படும் அத்தனை நம்பிக்கைகளையும் எந்நேரமும் திட்டிக்கொண்டும் கேலிசெய்துகொண்டுமே இருந்திருக்கிறார். பெண் விடுதலை பற்றியும், விதவைத் திருமணம் பற்றியும், தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை ஒழிப்பது பற்றியும், மதம் நம்மீது திணிக்கும் அசிங்கங்கள் பற்றியும் எத்தனை முறை அவர் பேசியிருப்பார்? அதைக் கடைபிடித்தும் வாழ்ந்தார். அவர் ஒரு உண்மையான Iconoclast  . ஒரு கலகக்காரர்.

அவரைப்போல், எதையும் கேள்விகேட்டு, அந்த பதில் நமது மனதில் முழுமையாகப் படிந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள நாம் பழக வேண்டும். ஒரே ஒரு விஷயம். இந்த உலகில் நாம் வாழும் வாழ்க்கையைப் போலவே, சகமனிதனுக்கும் வாழ உரிமை இருக்கிறது என்பது நம்மால் சரிவரப் புரிந்துகொண்டுவிடப்பட்டாலேயே, எவருக்கும் எந்தத் துன்பமும் விளைவிக்காமல் வாழ்ந்துவிடலாம்.

ஆகவே, நல்ரசனையோடு, விசாலமான மனதோடு, ஒரு Iconoclast  ஆக வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை சமுதாயம் திணிக்கும் அசிங்கமான சிந்தனைகளை உடைப்போம்.


                                                                                                                     
                                                                                                                                          -- வீராசாமி
இவர் மேலும் கூறுகிறார் ...

14 கலந்துரையாடல்கள்

புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ஜஸ்டிஸ் (Justice) என்று மூன்று பத்திரிக்கைகளை நடத்தியவர்கள். அப்படி வரலாற்றை பதிவு செய்தவர்களின் வரலாறு இன்று பயங்கரமாக சுருங்கிப் போய்விட்டது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றப் பெயர் கூட அவர்கள் நடத்திய பத்திரிக்கையின் பெயராலேயே நீதிக் கட்சி என்று சுருங்கிப் போய்விட்டது. தியாகராயர் நினைவாக பெயர் சூட்டப்பட்ட பகுதி இன்று சுருங்கி தி.நகர் ஆகிவிட்டது. பனகல் அரசரின் நினைவாக அமைக்கப்பட்ட பனகல் பூங்காவுக்கும் அவருக்கும் இன்றெதுவும் தொடர்பில்லாதது போன்ற நிலை நிலவுகிறது. இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.திராவிடர் கழகத் தோழர்கள் சிலரும், வாலாசா வல்லவன், க.திருநாவுக்கரசு போன்ற தோழர்களும் இன்னும் சிலரும் நீதிக்கட்சியின் வரலாறைத் தொகுத்துள்ளார்கள். ஆனால், பரவலாக நீதிக்கட்சியின் சாதனைகளும், வரலாறும் பொதுமக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

இன்றைய நிலையில் (2011 இல்) நீதிக்கட்சியின் வரலாற்றை எழுதுவதென்றால் ஆழமான முன்னுரையோடு துவங்க வேண்டும், சில கூடுதல் தகவல்கள் தேவை. நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் விவரம் அறிந்து வாழ்ந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்று யாரும் வாழ்ந்து வருவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை, எத்தனை புரட்டோடும், திரித்தும் எழுதலாம். அந்த புரட்டுகளுக்கும் திரிபுகளுக்கும் யாரும் பதிலோ, மறுப்போ சொல்லப்போவதில்லை. திராவிடத் தேசியத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் சண்டை போடும் வேளையில் இந்த புரட்டர்களையெல்லாம் யாரும் கவணிக்கப்போவதில்லை, யார் வேண்டுமானாலும், எத்தனை திரிபுகளையும் மேற்கொள்ளலாம். நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்கு புறக்கடை வேலையெல்லாம் செய்துதான் ஆட்சிக்கு வந்தார்கள், என்ற பழைய பல்லவியை புதிய பாடகர்களையும், கருவிகளையும் கொண்டு பாடலாம். அவர்கள் ஆதிதிராவிடரை முதலமைச்சராக ஆக்கவில்லை, அவர்கள் நலனுக்கு எதையும் செய்யவில்லை என்று புதிதாகவும் பாடல் இயற்றலாம். எந்த மறுப்பையோ, வரலாற்று உண்மைகளையோ உரக்கச் சொல்லும் காலமும் இல்லை.

ஆனால், ஒரு முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்பு இப்படி பாடியவர்களுக்கெல்லாம், பதிலடி கொடுக்கும் ஒரு தலைமுறை இருந்தது. அந்த புரட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்ல நீதிக்கட்சியோடு தொடர்பிலிருந்த மூத்தவர் வீ.ஆர்.சந்திரன் "நீதிக்கட்சி வரலாறு" என்ற சுருக்கமான புத்தகத்தைத் தந்திருக்கிறார். நீதிக்கட்சியின் வரலாற்றை மேற்கொண்டு விரிவாய் படிக்க விரும்புவர்களுக்கு ஒரு அருமையான முன்னுரை இந்த புத்தகம், அல்லது வெறுமென நீதிக்கட்சி வரலாறு தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் ஏற்ற நூல் இது. இந்நூலைப் பதிப்பித்தவர் இன்றைய அப்துல்லாவும், நேற்றைய பெரியார் தாசனும். பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1982. மொத்தம் அய்ம்பது சொச்சம் பக்கம்.


முன்பே கூறியது போல அன்றைய நிலையில் நீதிக்கட்சிக்கு பெரிதாக முன்னோட்டம் தேவையில்லாத நிலையிலும், அத்தகைய முன்கதை, சமூகச் சூழலைப் பற்றிய பெரிய அறிமுகமெல்லாம் இல்லாமல், தியாகராயர், மாதவன் நாயர் பற்றிய அறிமுகங்களோடு துவங்கி, நீதிக்கட்சியின் துவக்கத்தை சொல்லிச் செல்கிறார். இரு தலைவர்களுக்கும் இருந்த முரண், நட்பு என்று விளக்கும் போதே நீதிக்கட்சியின் துவக்ககால வரலாற்றையும் விவரித்து, அவர்களது ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளையும், சொல்கிறார். மாதவன் நாயர், தியாகராயர், பனகல் அரசர் இப்படி பல நீதிக்கட்சித் தலைவர்களையும், அவர்களுக்குக் கட்சியோடு இருந்த தொடர்பும், நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தின் கடைசி நிலையும், பின்னர் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவர் ஆவதும், நீதிக்கட்சி - திராவிடர் கழகம் - திமுக என்று நீதிக்கட்சியின் முழு வரலாறையும், குத்தூசி குருசாமி சொல்லியதைப் போல விறுவிறுப்பாக அய்ம்பது பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

அன்றைய நிலையில் நீதிக்கட்சியின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, பதிலும் விளக்கமும் அளிக்கிறார். உதாரணமாக வெள்ளையர்களின் அடிவருடிகள் என்ற விமர்சனத்துக்கு இந்தக் கேள்வியைக் கேட்பவர்களுக்கு அருகதையுள்ளதா என்பதில் ஆரம்பித்து அவர் சொல்லிச் செல்லும் விளக்கம் நீதிக்கட்சியின் முக்கிய கொள்கையை விவரிக்கும் போதே, தியாகராயரின் தனிப்பட்ட கொள்கைகளையும், அவர் உறுதியையும் விளக்குவது வரை செல்கிறது. நீதிக்கட்சி தோற்றத்துக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் அரசியல் சீர்திருத்தமா? சமூக சீர்திருத்தமா? என்ற கொள்கை வேறு பாட்டில் காங்கிரசில் அரசியல் சீர்திருத்தத்தக் குழு வென்றது, காங்கிரசின் சமூக சீர்திருத்தக் குழு தோற்று மறைந்து போனது. நீதிக்கட்சியோ சமூக சீர்திருத்தத்தை முன்வைத்தது, இது காங்கிரசிலிருந்து நீதிக்கட்சி முரன்பட்டு நின்ற முதல் இடம், 1920இலேயே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்கள், காங்கிரசு முதலில் தவறவிட்டு பின் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறு கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று காங்கிரசு அத்தனை முரண்பாடுகளையும், கோபங்களையும் நீதிக்கட்சி மீது கொண்டிருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பெரிய முரண்பாடாக விளங்கியது பிராமணர், பிராமணரல்லாதார் நலனில் நீதிக்கட்சியும் காங்கிரசும் கொண்டிருந்த வேறு வேறு பார்வைகள் தான். இப்படி காங்கிரசு - நீதிக்கட்சி, நீதிக்கட்சி - காந்தி என்று பல முரண்பாடுகளையும் பட்டியலிட்டுச் செல்லும் போதே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாதோர் நலனுக்காகவும், அவர்களுக்கு அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கியது, பல அரசு துவக்கப் பள்ளிகளைத் தொடங்கி தமிழகத்தில் கல்வியைப் பரவாலாக்க நடவடிக்கை எடுத்தது என்று நீதிக்கட்சியின் பல சாதனைகளை விளக்கி, பெரியார் நீதிக்கட்சியின் தலைமையை ஏற்று திராவிடர் கழகமாக மாற்றியதில் இந்த புத்தகத்தை முடிக்கிறார். இப்படி நீதிக்கட்சியின் முழுமையான வரலாறை இவ்வளவு சுருக்கமாக முடிக்கிறார்.

இந்த புத்தகம் இன்று பதிப்பிலிருக்கிறதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சி நசனுடைய தமிழத்திலும் இந்த நூல் மின்நூலாக இல்லை. இப்படி ஒரு நூலாவது இருந்ததே என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு.


-- தமிழினியன்.சுப
இவர் மேலும் கூறுகிறார் ...

13 கலந்துரையாடல்கள்