புயல் வீசிச் சென்ற தடத்தில் வேம்புகளும் பெரும் ஆலமரங்களும் கூட வீழ்வது இயல்பே. அதே போல காலமும் சூறாவளியைப் போல சுழன்றடித்ததில் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழித்தெறியப்பட்ட பக்கங்களில் நீதிக்கட்சியும் அதன் வரலாறும் ஒன்று. இத்தனைக்கும் 1917யிலேயே தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முறையே திராவிடன், ஆந்திர பிரகாசினி மற்றும் ஜஸ்டிஸ் (Justice) என்று மூன்று பத்திரிக்கைகளை நடத்தியவர்கள். அப்படி வரலாற்றை பதிவு செய்தவர்களின் வரலாறு இன்று பயங்கரமாக சுருங்கிப் போய்விட்டது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றப் பெயர் கூட அவர்கள் நடத்திய பத்திரிக்கையின் பெயராலேயே நீதிக் கட்சி என்று சுருங்கிப் போய்விட்டது. தியாகராயர் நினைவாக பெயர் சூட்டப்பட்ட பகுதி இன்று சுருங்கி தி.நகர் ஆகிவிட்டது. பனகல் அரசரின் நினைவாக அமைக்கப்பட்ட பனகல் பூங்காவுக்கும் அவருக்கும் இன்றெதுவும் தொடர்பில்லாதது போன்ற நிலை நிலவுகிறது. இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.திராவிடர் கழகத் தோழர்கள் சிலரும், வாலாசா வல்லவன், க.திருநாவுக்கரசு போன்ற தோழர்களும் இன்னும் சிலரும் நீதிக்கட்சியின் வரலாறைத் தொகுத்துள்ளார்கள். ஆனால், பரவலாக நீதிக்கட்சியின் சாதனைகளும், வரலாறும் பொதுமக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

இன்றைய நிலையில் (2011 இல்) நீதிக்கட்சியின் வரலாற்றை எழுதுவதென்றால் ஆழமான முன்னுரையோடு துவங்க வேண்டும், சில கூடுதல் தகவல்கள் தேவை. நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் விவரம் அறிந்து வாழ்ந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்று யாரும் வாழ்ந்து வருவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை, எத்தனை புரட்டோடும், திரித்தும் எழுதலாம். அந்த புரட்டுகளுக்கும் திரிபுகளுக்கும் யாரும் பதிலோ, மறுப்போ சொல்லப்போவதில்லை. திராவிடத் தேசியத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் சண்டை போடும் வேளையில் இந்த புரட்டர்களையெல்லாம் யாரும் கவணிக்கப்போவதில்லை, யார் வேண்டுமானாலும், எத்தனை திரிபுகளையும் மேற்கொள்ளலாம். நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்கு புறக்கடை வேலையெல்லாம் செய்துதான் ஆட்சிக்கு வந்தார்கள், என்ற பழைய பல்லவியை புதிய பாடகர்களையும், கருவிகளையும் கொண்டு பாடலாம். அவர்கள் ஆதிதிராவிடரை முதலமைச்சராக ஆக்கவில்லை, அவர்கள் நலனுக்கு எதையும் செய்யவில்லை என்று புதிதாகவும் பாடல் இயற்றலாம். எந்த மறுப்பையோ, வரலாற்று உண்மைகளையோ உரக்கச் சொல்லும் காலமும் இல்லை.

ஆனால், ஒரு முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்பு இப்படி பாடியவர்களுக்கெல்லாம், பதிலடி கொடுக்கும் ஒரு தலைமுறை இருந்தது. அந்த புரட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்ல நீதிக்கட்சியோடு தொடர்பிலிருந்த மூத்தவர் வீ.ஆர்.சந்திரன் "நீதிக்கட்சி வரலாறு" என்ற சுருக்கமான புத்தகத்தைத் தந்திருக்கிறார். நீதிக்கட்சியின் வரலாற்றை மேற்கொண்டு விரிவாய் படிக்க விரும்புவர்களுக்கு ஒரு அருமையான முன்னுரை இந்த புத்தகம், அல்லது வெறுமென நீதிக்கட்சி வரலாறு தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் ஏற்ற நூல் இது. இந்நூலைப் பதிப்பித்தவர் இன்றைய அப்துல்லாவும், நேற்றைய பெரியார் தாசனும். பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1982. மொத்தம் அய்ம்பது சொச்சம் பக்கம்.


முன்பே கூறியது போல அன்றைய நிலையில் நீதிக்கட்சிக்கு பெரிதாக முன்னோட்டம் தேவையில்லாத நிலையிலும், அத்தகைய முன்கதை, சமூகச் சூழலைப் பற்றிய பெரிய அறிமுகமெல்லாம் இல்லாமல், தியாகராயர், மாதவன் நாயர் பற்றிய அறிமுகங்களோடு துவங்கி, நீதிக்கட்சியின் துவக்கத்தை சொல்லிச் செல்கிறார். இரு தலைவர்களுக்கும் இருந்த முரண், நட்பு என்று விளக்கும் போதே நீதிக்கட்சியின் துவக்ககால வரலாற்றையும் விவரித்து, அவர்களது ஆட்சிக்காலத்தில் அவர்கள் செய்த சாதனைகளையும், சொல்கிறார். மாதவன் நாயர், தியாகராயர், பனகல் அரசர் இப்படி பல நீதிக்கட்சித் தலைவர்களையும், அவர்களுக்குக் கட்சியோடு இருந்த தொடர்பும், நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தின் கடைசி நிலையும், பின்னர் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவர் ஆவதும், நீதிக்கட்சி - திராவிடர் கழகம் - திமுக என்று நீதிக்கட்சியின் முழு வரலாறையும், குத்தூசி குருசாமி சொல்லியதைப் போல விறுவிறுப்பாக அய்ம்பது பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

அன்றைய நிலையில் நீதிக்கட்சியின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, பதிலும் விளக்கமும் அளிக்கிறார். உதாரணமாக வெள்ளையர்களின் அடிவருடிகள் என்ற விமர்சனத்துக்கு இந்தக் கேள்வியைக் கேட்பவர்களுக்கு அருகதையுள்ளதா என்பதில் ஆரம்பித்து அவர் சொல்லிச் செல்லும் விளக்கம் நீதிக்கட்சியின் முக்கிய கொள்கையை விவரிக்கும் போதே, தியாகராயரின் தனிப்பட்ட கொள்கைகளையும், அவர் உறுதியையும் விளக்குவது வரை செல்கிறது. நீதிக்கட்சி தோற்றத்துக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய சூழலில் அரசியல் சீர்திருத்தமா? சமூக சீர்திருத்தமா? என்ற கொள்கை வேறு பாட்டில் காங்கிரசில் அரசியல் சீர்திருத்தத்தக் குழு வென்றது, காங்கிரசின் சமூக சீர்திருத்தக் குழு தோற்று மறைந்து போனது. நீதிக்கட்சியோ சமூக சீர்திருத்தத்தை முன்வைத்தது, இது காங்கிரசிலிருந்து நீதிக்கட்சி முரன்பட்டு நின்ற முதல் இடம், 1920இலேயே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்கள், காங்கிரசு முதலில் தவறவிட்டு பின் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது. இவ்வாறு கட்சி, ஆட்சி, அதிகாரம் என்று காங்கிரசு அத்தனை முரண்பாடுகளையும், கோபங்களையும் நீதிக்கட்சி மீது கொண்டிருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பெரிய முரண்பாடாக விளங்கியது பிராமணர், பிராமணரல்லாதார் நலனில் நீதிக்கட்சியும் காங்கிரசும் கொண்டிருந்த வேறு வேறு பார்வைகள் தான். இப்படி காங்கிரசு - நீதிக்கட்சி, நீதிக்கட்சி - காந்தி என்று பல முரண்பாடுகளையும் பட்டியலிட்டுச் செல்லும் போதே, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிராமணரல்லாதோர் நலனுக்காகவும், அவர்களுக்கு அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கியது, பல அரசு துவக்கப் பள்ளிகளைத் தொடங்கி தமிழகத்தில் கல்வியைப் பரவாலாக்க நடவடிக்கை எடுத்தது என்று நீதிக்கட்சியின் பல சாதனைகளை விளக்கி, பெரியார் நீதிக்கட்சியின் தலைமையை ஏற்று திராவிடர் கழகமாக மாற்றியதில் இந்த புத்தகத்தை முடிக்கிறார். இப்படி நீதிக்கட்சியின் முழுமையான வரலாறை இவ்வளவு சுருக்கமாக முடிக்கிறார்.

இந்த புத்தகம் இன்று பதிப்பிலிருக்கிறதா என்று தெரியவில்லை. பொள்ளாச்சி நசனுடைய தமிழத்திலும் இந்த நூல் மின்நூலாக இல்லை. இப்படி ஒரு நூலாவது இருந்ததே என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு.


-- தமிழினியன்.சுப

13 பேர் சொல்றாங்க...

  1. Unknown என்ன சொல்றாருன்னா:

    வெரிகுட். சைட்டு களை கட்ட ஆரம்பிச்சிருச்சி. மதியம் வந்து விரிவா கமென்ட் போடுவேன்.

  2. Unknown என்ன சொல்றாருன்னா:

    ஆரம்பமே தூள் பதிவுகளாய் வெளியிடுறாங்க பா.. கருந்தேள் அண்ணே ..கரெக்டா?

  3. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    எவ்வளவோ உருப்படாத விசயங்கள் நம்மள பத்தி இருந்தாலும், தமிழ்னு சொல்லிக்கறதுல பெருமைபடக் கூடிய விசயங்களில் ஒண்ணு, இந்த ஜாதி பேர பெயர்களுக்கு பின்னால சேத்துக்க கொஞ்சமாச்சு வெக்கப்படும் ஆட்கள் இங்க இருக்காங்க.அதற்குரிய முழு பெருமை பெரியாரையே போய்ச் சேரும். ஆனா அந்த நெலமையும் இப்ப கொஞ்ச கொஞ்சமா மாறிகிட்டு வருது.

    அதேமாதிரி அவுரு பெருமளவில் ஆரம்பிச்சு வெச்ச கலப்பு திருமணங்கள் ( விலங்குகளுக்கும் மனுசங்களுக்கும் பண்ணா தான கலப்பு திருமணம் - மனுசங்களுக்குள்ள பண்ணா எப்புடி கலப்பு திருமணம், இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு).

  4. தமிழினியன் என்ன சொல்றாருன்னா:

    //விலங்குகளுக்கும் மனுசங்களுக்கும் பண்ணா தான கலப்பு திருமணம் - மனுசங்களுக்குள்ள பண்ணா எப்புடி கலப்பு திருமணம், இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு//

    கொழந்த இது உண்மையான சந்தேகமா இல்ல நக்கலா?

    விலங்குகளுக்குள்ள மணமுறை இருக்கா? அப்படியிருந்தா நீங்க கேக்குற கேள்வி சரி. அப்படியே நீங்க சொல்ற மாதிரி செஞ்சா அது எப்படி கலப்புத் திருமணம் ஆகும்? இரண்டு வேறு உயிரிணங்களுக்குள்ளான கலப்புத் திருமணம்னு தானே அதைச் சொல்ல முடியும்.

  5. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    // இரண்டு வேறு உயிரிணங்களுக்குள்ளான கலப்புத் திருமணம் //

    ஏங்க இவ்வளவு பெருசாலாம் டைப் அடிக்க முடியுமா ?

    மனுசங்களுக்கும் மனுசங்களுக்கும் உள்ள கலக்க என்னயிருக்கு ?? பெரியார் காலத்துல இருந்த சூழ்நிலை வேற....ஆனா இப்பவும் அதே வார்த்தைய பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை...

  6. தமிழினியன் என்ன சொல்றாருன்னா:

    ஏன் முடியாது நீங்களும் முயற்சிக்கலாமே.....

    அப்போ நீங்க புதுசா ஒரு வார்த்தைய உருவாக்குங்க... பிரபலப்படுத்திடுவோம்

  7. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    ஏங்க நா இப்புடி ஒரு கமென்ட் போடுறேன் |
    // இரண்டு வேறு உயிரிணங்களுக்குள்ளான கலப்புத் திருமணம் //.............

    அதுக்கு இப்புடி பதில்

    // ஏன் முடியாது நீங்களும் முயற்சிக்கலாமே.....//

    சொன்னா ஜனங்க என்ன நெனைப்பாங்க.....அட்மின்களிடம் சொல்லி இந்த கமென்ட்ட தூக்கணும்.....

  8. தமிழினியன் என்ன சொல்றாருன்னா:

    //ஏங்க இவ்வளவு பெருசாலாம் டைப் அடிக்க முடியுமா ?// இந்தக் கேள்விக்கு இந்த பதில்
    //ஏன் முடியாது நீங்களும் முயற்சிக்கலாமே.....//

    நான் சரியா சொல்லாம உட்டுட்டேன்.

    டியர் அட்மின்ஸ் எதாவது பாத்து செய்யுங்க

  9. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    @ அருண் குமார் - நீங்களும் ஏதாவது எழுதலாமே. மேலே எப்புடி எழுதி வெளியிடுறதுன்னு ஒரு விளக்கவுரை இருக்கு. எதாவது பார்த்து செய்யுங்க ..

  10. Lathika says:

    கொழந்தையின் 'கரேஜ் த டாக்' ப்ரோபைல் படம், கண்டபடி சிரிப்பை வரவழைக்கிறது

  11. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    @ லத்திகா - குறிப்புகளை பகிர்ந்தமைக்கு நன்றி

  12. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    யாருங்க அது லத்திகா,Who is she ...........??

    பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கமென்ட்கள் போடுறாங்க............

  13. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    Template அட்டகாசமா இருக்கு. இதை தேர்ந்தெடுத்த உத்தமருக்கு பாராட்டுக்கள்............

Leave a Reply