அறிவுடைநம்பி, சிறுவன். வயது ஒரு பதிநான்கு இருக்கலாம். மிகவும் கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தில் வளர்க்கப்பட்ட ஒரு ஜீவன் அது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே, அறிவுடைநம்பிக்கும் அவனை வளர்த்த சமூகத்துக்கும் ஒத்த கருத்து என்பது இல்லாமலே கழிந்தது. அவனது சமூகம் விரதம் இருக்கச்சொன்னால், அப்போதுதான் அறிவுடைநம்பி, கடோத்கஜன் சாப்பிடுவது போல் உணவு உண்டான். அவனது சமூகம் அவனை விளையாடச் சொன்னால், அப்போதுதான் அறிவுடைநம்பி படுக்கையில் சுருண்டு படுத்துக் கொள்ளத் துவங்கினான். அது ஏன் என்று அவனாலேயே சொல்ல முடியவில்லை. சமூகத்தின் கருத்துகளுக்கு எதிராக அவன் நடந்துகொள்ளத் துவங்கியது, அவனது மிகச்சிறு வயதிலிருந்தே தொடங்கியது என்று அவனை அறிந்த யாராவது சொன்னால், அதையும் முற்றிலும் ஆட்சேபிக்கக்கூடிய ஒரு குணத்தை அவன் பெற்றிருந்தான். உலகின் பார்வைக்கு அவன் சிறுவன். ஆனால், அவனது மனத்தின் அடியாழத்தில், அவனுக்கு இருந்த எண்ணம் என்னவெனில், அவன் சிறுவன் அல்ல என்பதே. ஆனால், அதையும் உணர்ந்து செயல்படக்கூடிய ஒரு இயல்பு அவனுக்கு இல்லாதிருந்தது. எனவே, சிறுவனாயும், அதே சமயம் சிறுவன் இல்லாமலும் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை அவன் அறியாமலே வாழலானான்.
அறிவுடைநம்பி சேர்ந்தது, தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஹிந்துமதத்தின் மேன்மைகளை மனதில் புகுத்தும் ஒரு கலாசாலையில். ஏன்? ஒருக்கால், அவனது தந்தை, சொந்தமாக வியாபாரம் செய்துவந்தும், ஒரு நேர்மையான மனிதனாக இருக்க முடிவு செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பள்ளியில் மட்டுமே, மற்றப் பள்ளிகளைவிட கட்டணம் மிகக் குறைவு. ஏனெனில், ஹிந்து மதத்தின் எல்லா விதிகளையும் சிறார்கள் மீது புகுத்தும் ஒரு கொள்கையை அந்தப் பள்ளிக்கூடம் கடைபிடித்து வந்ததேயாகும். அறிவுடைநம்பியின் தகப்பனார், அறிவுடைநம்பி பிறக்கும்போதே, நாற்பது வயதைக் கடந்த ஒரு மனிதராவார். அவர், அவரது சொந்தத்திலேயே ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார்.. கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள், அவரது காதல் உயிர்வாழ்ந்து வந்தது. அவரும் சரி, அந்தப் பெண்ணும் சரி, ஒருவரையொருவர் மிக விரும்பி வந்தனர். அறிவுடைநம்பியின் தகப்பனார். அக்காலத்தின் காங்கிரஸில் ஒரு முக்கியப் பொறுப்பை வகித்து வந்தார். அதாவது, காங்கிரஸ் கட்சி பெற்றிருந்த ஏராளமான தொண்டர்களில் அவரும் ஒருவர். இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால், அவர் இருந்த அந்த இடத்தில், மிகத் துடிப்பான ஒரு இளைஞராக அவர் விளங்கிவந்தார். அந்த இடத்தின் கௌன்சிலர் தேர்தலுக்குக்கூட, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட ஒரு மனிதர் அவர். காரணம்? அப்போது முதல்வராக இருந்த எம்ஜியாருக்கு இவரைப் பற்றித் தெரிந்திருந்ததே. எம்ஜியாரின் எண்ணப்படியே, சைக்கிள் சின்னத்தில் அந்தத் தொகுதியில் கௌன்சிலராகப் போட்டியிட்டார் அறிவுடைநம்பியின் தகப்பனார். ஆனால், தேர்தலின் நெளிவுசுளிவுகள் எதுவுமே தெரியாமல், தனது நேர்மையை மட்டும் வைத்துப் போட்டியிட்டதால், தோல்வியைத் தழுவினார்.
அதற்கு முன்பே, ஏரியாவின் அதிரடி நாயகராக அவர் விளங்கி வந்தார். பிக்பாக்கெட் ஒருவனை, பேருந்தில் இருந்து தரதரவென்று இழுத்தபடியே, அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த காவல்நிலையம் சென்றூ சேர்த்தது அவரது வீரமிக்க செயல்களில் ஒன்றாகும். ஆனால், திருமணம் நடந்தவுடன், தனது நடவடிக்கைகளை அடக்கி வாசிக்க ஆரம்பிதார் அவர். காரணம்? தனது நடவடிக்கைகளினால், தான் பெற்ற ஒரே மகனுக்கோ அல்லது தனது காதல் மனைவிக்கோ ஏதேனும் ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையே.
இது இப்படி இருக்கையில், அறிவுடைநம்பி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளரத் துவங்கினான். அவனது தந்தை, கௌன்சிலர் தோல்விக்குப் பின்னர். சொந்தமாக வியாபாரம் செய்யத் துவங்கினார். என்ன வியாபாரம்? அவர் இருந்த ஊரில், துணி சம்மந்தப்பட்ட ஆலைகள் மிக அதிகம். எனவே, அவைகளுக்குத் தேவைப்பட்ட உபரி பாகங்களை விநியோகம் செய்யும் வியாபாரமே அது. இவரது இயல்புப்படி, நேர்மையாக வியாபாரம் செய்யவேண்டும் என்ற அவாவினால், அந்த வியாபாரமும் இழுத்து மூடப்பட்டது.
முடிவு? அறிவுடைநம்பிக்குப் பால் புகட்டக்கூட அவரிடம் பணம் இல்லை. மனது ஒடிந்து போன அவர், அந்த சமயத்தில் பாண்டிச்சேரி அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பற்றிப் புத்தகம் எழுதிய அமரசிம்மன் என்ற எழுத்தாளரிடம், அவரது இந்த ஏழ்மை நிலையைப் பற்றிக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், அன்னையைப் பற்றிய அமரசிம்மனின் புத்தகம் ஒன்றில் இன்னமும் இடம் பெற்றிருக்கிறது. குழந்தைக்குப் பால் கூட வாங்க முடியாத நிலையில் அவர் இருப்பதாக எழுதிய கடிதம், வரிக்கு வரி அந்தப் புத்தகத்தில் உள்ளது. அதை அவரே எதிர்பார்த்தவரலல்லர். அவருக்குத் தேவையாக இருந்தது, அன்னையின் ஆசிகள் மட்டுமே.
அந்தக் கடிதத்திற்குப் பின்னர், அவரது வாழ்வில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. சொந்தத் தொழிலில் அல்ல. அவரது குலத்தொழிலான, மக்களுக்குப் பூஜைகள் செய்யும் தொழிலில். திடீரென, அவரது ஊரின் ஒரு முக்கியப் பிரமுகரின் வீட்டில் பூஜை செய்துவந்த இவரது உறவுக்காரர், ஆள் பற்றவில்லை என்று இவருக்கு அழைப்பு விடுத்த நிகழ்ச்சியில் இருந்து, இந்த முன்னேற்றம் துவங்குகிறது. அறிவுடைநம்பியின் தகப்பனாரும், இதை ஏற்றுக்கொண்டார்.
அன்றிலிருந்து, இந்தக் கதை எழுதப்படும் இன்றைய தேதி வரை, அந்த முக்கியப் புள்ளியின் வீட்டில் அவர் அத்தனை பூஜைகளையும் கவனித்து வருகிறார். அவரை அழைத்த அந்த உறவுக்காரர், கல்தா கொடுக்கப்பட்டதற்கும் இவருக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இதன்மூலம், அவர் பெரிதும் நம்பும் ஆன்மீகத் துறையில் அவருக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவரது அவா என்னவெனில், இனியொரு முறை தாயின் வயிற்றில் பிறக்கக்கூடிய விதியை இறைவன் அருளாதிருக்க வேண்டும் என்பதே.
அறிவுடைநம்பி, இந்த ஆன்மீகம் கீன்மீகம் எல்லாம் தெரியக்கூடிய நிலையில் இருந்து மிகவும் பின்தங்கியிருந்தான். அவன் இருந்த வீடு, அவனது தாயின் அம்மாவின் வீடு. அதாவது, அவனது பாட்டி வீடு. காரணம்? அறிவுடைநம்பியின் அத்தை – அதாவது அவனது தந்தையின் தங்கை – திடீர் விதவையாகி, வீடு வந்து சேர்ந்ததே. விதவைத் தங்கையின் முன், குடும்பமாகத் தான் வாழ்வது, அவளது மனதில் அசூயையை விளைவிக்கும் என்ற காரணத்தால், அறிவுடைநம்பியின் தந்தை, அவனை அவனது தாயின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டார். இனி அவன் இங்கே தான் வளர வேண்டும் என்ற முடிவோடு.
இப்படித் தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்த அறிவுடைநம்பி, எல்லாவித சுதந்திரமும் பெற்றவனாக இருந்தான். அவனது பாட்டி, இவனுக்குப் பிடித்த உணவையே சமைப்பது வழக்கம். இதுவரை கிடைத்திராத சுதந்திரத்தைப் பெற்ற அறிவுடைநம்பி, அந்த்ச் சிறுவயதுக்கே உரித்தாகிய கர்வத்தை உடையவனாகத் திகழ்ந்தான். இதன்மூலம், பாட்டி வைக்கும் காப்பி, இவனுக்குப் பிடிக்கவில்லை எனில், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, அந்தக் காப்பியையே கொட்ட வைக்கும் பலம் உடையவனாகத் திகழ்ந்தான்.
அவனது தகப்பனார், தனக்குப் பிடித்த ஆன்மீகத் துறையில் பல இறை அனுபவங்கள் பெற்றவராக விளங்கிவந்தார். அவர் பெற்ற ஆற்றல் என்னவெனில், அவருக்கு முன் நிற்கும் நபரின் மனதில் இருக்கும் எண்ணத்தை அப்படியே சொல்லும் இயல்பு அவருக்கு இருந்தது. அது, அவர் வேண்டிப் பெற்ற இயல்பல்ல. அவர் செய்துவந்த பூஜைகளின் விளைவாக, அது அவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருந்தது.
அது ஏன் அவருக்கு இப்படிப்பட்ட வித்தைகள் வந்தன? இந்தக் கேள்விக்குப் பதிலானது, அவரது தாத்தா – அத்வைதாநந்த ஸ்வாமிகள் என்று புகழ் பெற்றிருந்த ஒரு சாமியார் – பல அற்புதங்களை நிகழ்த்திய ஒரு அதிசய மனிதரிடமிருந்து ஆரம்பிக்கிறது. அறிவுடைநம்பியின் தகப்பனார் , அச்சு அசலாக அந்த சாமியாரைப் போலவே தோற்றம் பெற்றிருந்தது ஒரு அதிசயம். அந்த அத்வைதாநந்தர், அறிவுடைநம்பியின் சொந்த ஊரில் அவர் வழிபட்ட அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பியிருந்தார். அவரது இளமைக்காலத்தில், பிரிட்டிஷ் ராஜ்யத்தில் ஒரு ரேஞ்சராக ஆனைமலைக் காடுகளில் திரிந்துகொண்டிருந்த அத்வைதாநந்தர், காட்டில் வழி தவறி. ஆஜானுபாகுவான ஒரு மனிதனைச் சந்தித்ததிலிருந்து அவரது ஆன்மீக வாழ்க்கை துவங்குகிறது. அந்த மனிதன், தனது பெயர் கருப்பசாமி என்று சொல்லி, அவருக்கு வழியைக் காண்பித்து உதவுகிறான். அதே சமயம், ரேஞ்சர் வேலையை விட்டுவிடச் சொல்லி, காசிக்குச் செல்லும்படி இவரைப் பணித்து, அங்கே த்ரைலிங்க ஸ்வாமிகள் என்று ஒருவரைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் சொல்லி, அந்த இடத்திலிருந்தே மறைந்துவிடுகிறான்.
உடனே வேலையை விட்ட அத்வைதாநந்தர், காசிக்குச் செல்ல, அங்கே இவருக்காகவே காத்துக்கொண்டிருந்த த்ரைலிங்க ஸ்வாமிகள் என்ற நபர் (குழந்தையானந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்). மந்திர உபதேசம் செய்து, தனது சொந்த ஊருக்கே இவரைச் செல்லச்சொல்லி அருள, சொந்த ஊருக்கு வந்துசேர்ந்த அத்வைதாநந்தர், தனது மனதிற்குகந்த அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பினார். அன்றில் இருந்து, அவரது வாழ்க்கை அடியோடு மாறியது. கோயிலுக்கு வந்த பேய்பிடித்த நபர்களுக்கு இவரது பிரத்யேகமான முறையில் விபூதியைப் போட, அதன்மூலம் பேய்கள் அவர்களை விட்டோடின. அதே நேரத்தில், தனது பக்தர்களின் வீட்டில், அவர்களுக்கு முன் இவர் தோன்ற, இவரது புகழ், அந்த ஊரெங்கும் பர ஆரம்பித்தது. இது நடந்தது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுடைநம்பி அடிக்கடி கூறுவான்.
இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் வளர்ந்த அறிவுடைநம்பி, அவனது ஆன்மீகப் பின்னணியின் பெருமை தெரியாமலே வளர்ந்தான். அவன் படித்த புத்தகங்கள், பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும், சாண்டில்யனின் பல கதைகளுமே. பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த அறிவுடைநம்பிக்கு, அவனது ஆசிரியையாக வந்த மணிமேகலை என்ற பெண்ணின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இது, அவனது ஐந்தரையாவது வயதில் ஏற்பட்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அந்த ஆசிரியை, அந்த எண்பதுகளின் முன்பகுதியில், லோ கட் என்று இன்று வழங்கப்பெறும் ரவிக்கை போட்டு வந்தது, அவனது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆசிரியையின் முதுகில் பெரும்பகுதியை அந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கண்டுவந்தனர். ஆனால், வேறு யாருக்குமே ஏற்படாத ஒரு மோகம், அறிவுடைநம்பிக்கு ஏற்பட்டது. இதன்விளைவாக, வீட்டுக்கு வந்து, யாரும் பார்க்காத தருணங்களில், வீட்டின் தூண்களில் ஒன்றைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, இடுப்பை மட்டும் ஆட்டத் துவங்கினான். இது, அவனது முக்கிய உறுப்பில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இவன் மட்டும் இதனைச் செய்யாது, இவனது உறவினர்களான சிறு பெண்களுக்கும் பையன்களுக்கும் இதனைச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினான். அவர்களுக்குமே இது பிடிக்க ஆரம்பித்தது.
வளர வளர, மணிமேகலை போய், கீதா என்ற ஆசிரியர் இவனது வகுப்புக்கு வந்தார். அழகிய உடலோடு, ஆசிரியருக்கே உரிய கண்ணாடி அணிந்துகொண்டு வளைய வந்த அந்த ஆசிரியை, அறிவுடைநம்பியின் மனதோடு ஒட்ட ஆரம்பித்தார். அதே நேரத்தில், அறிவுடைநம்பியின் பெரியம்மா, அவனோடு வீட்டில் வாழ்ந்துவந்த பெரியப்பாவின் கூடவே வாழ வந்தார். இந்தப் பெரியம்மா, இதுகாறும் வட இந்தியாவில் அவருடைய தாயுடன் வாழ்ந்து வந்தார். ஏனெனில், பெரியப்பா பல மாநிலங்களில் வேலை செய்து வந்ததேயாகும். ஆனால், இப்போது அவர் அறிவுடைநம்பியின் சொந்த ஊரிலேயே வேலை மாற்றலானவுடன், தனது மனைவியைத் தன்னுடனேயே அழைத்துக் கொண்டார்.
ஒருநாள், வீட்டினுள்ளேயே கிரிக்கெட் விளையாடிவந்த அறிவுடைநம்பி, பந்து அந்தப் பெரியப்பாவின் அறையினுள்ளே சென்றுவிட்டதால், அதனைப் பிடிக்க உள்ளே ஓடுகையில், பெரியப்பாவின் மடியில் பெரியம்மா படுத்திருப்பதைக் கண்டான். பெரியப்பா, இவனை முத்தமிடுவதைப் போலவே, பெரியம்மாவையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தார். ஆனால், உதட்டில். இதனைக் கண்ட அறிவுடைநம்பிக்கு, இயல்பாகவே அசூயை ஏற்பட்டது. காரணம், அதுவரை இவனை முத்தமிட்டுக்கொண்டிருந்த பெரியப்பா, இப்போது பெரியம்மாவை, உதட்டில் முத்தமிட்டதேயாகும். உடனேயே வெளியே ஓடிவந்த அவன், அன்றிலிருந்து பெரியப்பா மற்றும் பெரியம்மாவிடம் பேசாது இருக்கத் துவங்கினான்.
அறிவுடைநம்பி வளரத் துவங்கினான். இப்போது, அவனது ஆறாம் வகுப்பு. ஒன்றுமே புரியாத ஜியாக்ரஃபி வகுப்பு. தூக்கத்தில் ஆழ்ந்த அறிவுடைநம்பி, வகுப்பினுள்ளே, தனது முக்கிய உறுப்பில் நேரும் மாற்றத்தைப் பரிசோதித்துப் பார்க்கும்போது, ஆசிரியை அதனைக் கண்டுவிட்டார்.
“என்ன அறிவுடைநம்பி… ஏன் டான்ஸ் ஆடுறே? ஏன் பென்ச்சைக் கால்களுக்கு நடுவில இறுக்கிப் புடிச்சிருக்குற” என்று கேட்டுவிட்டார். உடனே பயத்தில் பென்ச்சை இயல்பு நிலைக்கு விடுவித்துவிட்டான் அறிவுடைநம்பி. ஏனெனில், இந்த ஆசிரியை, கொடூர தண்டனைகள் அளிப்பதில் பெயர்பெற்றவர். அதாவது, யாராவது பேசினால், இருவரின் காதுகளையும் இருவரும் பிடித்துக்கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில் உறுதியானவர். மட்டுமல்லாது, பெண் மாணவிகளின் மத்தியியில், பையன்கள், தங்களது டவுசர்களை அவிழ்த்துவிட்டு, ஜட்டியுடன் முட்டி போடவேண்டும் என்ற தண்டனையையும் அதிகமாக அளித்து வந்தார். அன்று அறிவுடைநம்பி ஜட்டியோடு தரிசனம் அளிக்காமல் தப்பியது, தம்பிரான் புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.
இப்படியே வளர்ந்து வந்த அறிவுடைநம்பியின் எட்டாம் வகுப்பில், பெரியம்மா, தனது பெண்ணையும் வட இந்தியாவில் இருந்து இவனது ஊருக்கு வரவழைத்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர், அக்காலத்திலேயே மிகப் புதிதாக இருந்தது.
சமிக்ஷா.
சமிக்ஷா, வீட்டுக்கு வந்ததும், அறிவுடைநம்பியுடன் நட்பாக ஆகிவிட்டாள். இவனை விட ஒரு வயது சிறிய பெண். ஏழாவது படித்து வந்தாள். சமிக்ஷாவுடன் அறிவுடைநம்பி, அவ்வப்போது வீட்டினுள்ளேயே வலை கட்டி, டென்னிஸ் ஆடி வந்தான். இவனது மனதிற்குகந்த தோழியாக சமிக்ஷா விளங்கிவந்தாள். அறிவுடைநம்பி, தனது தந்தை சேர்த்துவந்த பல புத்தகங்களைப் படித்துவந்ததால், பல துறைகளிலும் பேச்சாற்றல் உடையவனாகத் திகழ்ந்துவந்தான். இவனது பேச்சாற்றலுக்கு வடிகாலாக சமிக்ஷா விளங்கிவந்தாள். அவளுமே இவன் பேசுவதை ஆர்வமுடன் கேட்பது வழக்கம்.
இப்படி இருக்கையில், ஒருநாள், சமிக்ஷா வயிற்றுவலியில் துடித்தது அறிவுடைநம்பியைப் பாதித்தது. அவளுக்காகக் கடவுள்களை வேண்டிக்கொண்டான். சிறிதுநேரத்திலேயே அங்கு வந்த பெரியம்மா, சமிக்ஷா பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று அறிவித்தார். அறிவுடைநம்பியின் உயரத்துக்கு இணையாக இருந்த சமிக்ஷா, அவனைவிட உயரமாக வளர்ந்துவிட்டாளோ என்று விசனப்பட்ட அறிவுடைநம்பி, அவளைச் சென்று பார்த்தான். இவனைப் பார்த்தவுடன், தனது முகத்தைக் கவிழ்த்துக்கொண்ட சமிக்ஷா, இவனைப் பார்த்து வித்தியாசமான ஒரு புன்னகையைப் புரிந்தாள். அவளிடம் அவளது தற்போதைய உயரத்தைக் கேட்டான் அறிவுடைநம்பி. ஒன்றும் புரியாத சமிக்ஷா, இவனை விட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டாள். அவளது அடிவயிறு வலிப்பதாகவும் இவனிடம் கூறினாள். இதைக் கேட்டுத் துன்பம் அடைந்த அறிவுடைநம்பி, வீட்டினுள் ஓடி அமிர்தாஞ்சனம் எடுத்துவந்து அவளிடம் கொடுத்தான்.
அதில் இருந்து இவனுடன் விளையாட சமிக்ஷாவை அனுமதிக்காமல் அவனது பெரியம்மா தடுத்து வந்தார். அதேசமயம், சமிக்ஷாவின் உடலில் நிகழ்ந்த மாற்றங்களையும் அறிவுடைநம்பி அவதானித்து வந்தான். அதுவரை இவனைப்போலவே இருந்த சமிக்ஷா, திடீரெனத் தங்களது ஸாலிடேர் வண்ணத் தொலைக்காட்சியில் இவன் பார்த்துவந்த திரைப்பட ஹீரோயின்கள் போல ஆகிவந்தது இவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், சமிக்ஷாவோ, இவனுடன் விளையாடவும் பேசவும் முன்போலவே ஆர்வம் காட்டி வந்தாள். பின் மறுபடி பள்ளிக்கும் செல்லத் துவங்கினாள். விளையாடுகையில், இவனது கை அவளின் மேல் படுவதில் அவள் அடைந்த வெட்கம், அறிவுடைநம்பியைக் கவர்ந்தது. அனைவரும் சேர்ந்து வாழ்ந்த காரணத்தால், மிகச்சில சமயங்கள் சமிக்ஷா உடைமாற்றிய நேரங்களில், அறிவுடை நம்பி தெரியாத்தனமாக அவளைப் பார்த்து விட்டதில், அவன் மனதில் ஒரு புதிய அலை எழும்பியது.
இப்படியாக ஹையர் ஸெகண்ட்ரி என்று அழைக்கப்படும் பதினோராவது மற்றும் பனிரண்டாவது வகுப்பில் நுழைந்தான் அறிவுடைநம்பி. தனது பெரியம்மாவையும், அவர்களது பெண்ணையும் கவனிப்பதை அவனால் தடுக்க இயலவில்லை. அவர்களும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவன் கவனித்து வந்தான். பள்ளியில் அறிவுடைநம்பி, தான் படித்துவந்த புத்தகங்களைப் பற்றிச் சக மாணவர்களிடம் எடுத்துச் சொல்ல, அவர்கள், அவன் ஒரு தத்திப்பயல் என்ற எண்ணத்தை உறுதியாக அடைந்தனர். பின்னே? அமரகோசம், ஸ்வேதாச்வர உபநிஷத், முண்டகோபநிஷத், ருக்வேதம் ஆகியவற்றில் இருந்து மந்திரங்களின் மொழிபெயர்ப்பை இவன் பேசினால், எந்த மாணவன் ஏற்றுக்கொள்வான்? அதுவும் பள்ளிநாட்களில்?
இதற்கிடையில், அறிவுடைநம்பியின் பெரியப்பாவுக்கு ராஜஸ்தானில் வேலை மாற்றலாகிவிட, குடும்பத்தோடு அங்கே சென்றுவிட்டார். அத்தோடு சமிக்ஷாவின் நட்பும் முடிவுக்கு வந்தது.
ஒரு விசித்திர ஜீவனைப்போல் பள்ளியை முடித்த அறிவுடைநம்பி, கல்லூரி சேர்ந்தான். கல்லூரி அவனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ரெமோ போல ஆகிய அறிவுடைநம்பி, கல்லூரியிலேயே ஒரு பெண்ணைக் காதலிக்கவும் துவங்கினான். அவனை பதிலுக்குக் காதலித்த அந்தப் பெண் – பெயர் திவ்யா – தனது வீட்டிலும் இவனுக்காகச் சண்டையிட, கல்லூரி முடிந்து ஒரு நல்ல சாஃப்ட்வேர் வேலையில் சேர்ந்த அறிவுடைநம்பி, ஒரு சுபயோக சுபதினத்தில் திவ்யாவைக் கைப்பிடித்தான்.
அதன்பின் அலுவலகத்தில் லோன் போட்டு ஒரு ஃப்ளாட்டையும், ஒரு மாருதி ஆல்டோவையும் வாங்கிய அறிவுடைநம்பி, இப்பொழுதெல்லாம் ஒரு ஆன்மீகவாதியாகிவிடலாமா என்று யோசித்து வருகிறான். பத்திரிக்கைகளில் அடிக்கடிப் படித்துவந்த போலி சாமியார்களின் ராஜவாழ்க்கை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சொல்ல மறந்துவிட்டேன். சமிக்ஷா திருமணம் செய்துகொண்டு இப்போது அமெரிக்காவில் வாழ்கிறாள். அவ்வப்போது அறிவுடைநம்பிக்கு மின்னஞ்சலும் செய்வாள். ஃபேஸ்புக்கில் உள்ள அவளது புகைப்படங்களைத் தனது கணினியில் சேமித்து வைத்திருக்கும் அறிவுடைநம்பி, அவ்வப்போது மனைவி இல்லாத தருணங்களில் பகார்டி அடித்துவிட்டு அவளது நினைவில் மூழ்குவதுண்டு. தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு சமிக்ஷா என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் மனைவியிடம் வலியுறுத்தி வருகிறான். நடிகை சமிக்ஷாவை இவனுக்கு எப்போதிலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று இவனது மனைவி யோசித்து வருகிறாள்.
படிக்க நிறைய நேரம் எடுத்தது. ஒரு கட்டத்தில்.. இது ”எக்ஸைல்” நாவலின் எதோ ஒரு பகுதியோ-ன்னு தோண ஆரம்பித்தது.
அப்புறம்... வார்த்தைகளும், வாக்கியங்களும் கடினமாக ஆரம்பிக்கும் பொழுது (ஆன்மீக விசயங்கள்) எழுதியது ஜெயமோகனோ என நினைத்தேன்.
ஆரம்ப பாராக்களில்.. ஒரு கேள்வி கேட்டு.. அதற்கு விளக்கம் சொல்வது போல்.. கதை பின்னோக்கி... பின்னோக்கி போகும் ஸ்டைல் தெரிஞ்சது. முழு கதையும் அப்படி போகும்னு நினைக்கும் போது.. திடீர்ன்னு ஸ்ட்ரெய்ட்டா போக ஆரம்பிச்சிடுச்சி.
இதுதான் பின்நவீன ஸ்டைலான்னு தெரியலை. அப்படின்னா... நான் படிச்ச ஒரு முழு பின்நவீனக்கதை இதுதான்.
பொய் சொல்ல விரும்பலை. It took me some effort to finish it. அது கண்டிப்பா கதையின் பிரச்சனையா இருக்கனும்ங்கற அவசியமில்லை. எனக்கு இந்த ஸ்டைல் ரொம்ப புதுசு.
முதல் முயற்சிக்கு... வாழ்த்துகள்!!! :)
இது என்ன சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வெச்சு எழுதப்பட்டதா ?
கன்னி முயற்சி - நல்லா இருக்கு.
கதையில் நிறைய விஷயம் Third Person singularலேயே வருவதால், வந்தான் - கொடுத்தான் - துவங்கினான்
எனக்கு படிக்க சிரமமாக உள்ளது.எனக்கு இந்த பிரச்சனை எப்பவும் உண்டு.
கதையிலயே எல்லா நிகழ்வுகளையும் முடிந்தளவு சொல்லிரனும்ன்னு ஒரு தொனி தெரிவதால், பாதிக்கு மேல எனக்கு கொஞ்சம் drag ஆகிருச்சு.
ஆனாலும் முதல் முயற்சி என்பதை நம்ப முடியவில்லை
இந்த கதையை கூட படிச்சிட்டுடேன். இந்த டங்குவார் போட்டிருக்குற கமென்ட் தான் ஒண்ணும் புரியல. என்னைய மாதிரி சிசுக்களை மனதில் வைத்து கமென்ட் போடுமாறு திருவாளர்.டங்குவாரை கேட்டுக் கொள்கிறேன்
mathavangaluku vena indha kutti katha konjam bore adikalam..aana..enakku indha "aruvidainambiya" romba pidikum:)
நண்பா,
இது முன்பே நீங்க எனக்கு அனுப்பினீர்கள் இல்லையா?சாருவின் எழுத்து நடை போலவே படிக்க விறுவிறுப்பாக இருக்கு,இது நிதானத்தில் எழுதியது தானா?போன் செய்தால் எடுக்கவில்லையே?
இவர் இப்பல்லாம் நம்ம போனை எடுக்க மாட்டேங்கறாருங்க. நான் ஒரு வாரமா ஒரு விசயத்தை போன்ல சொல்லனும்னு ட்ரை பண்ணி
வெய்ட்டிங்...
//பெரியம்மா, சமிக்ஷா பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று அறிவித்தார். அறிவுடைநம்பியின் உயரத்துக்கு இணையாக இருந்த சமிக்ஷா, அவனைவிட உயரமாக வளர்ந்துவிட்டாளோ என்று விசனப்பட்ட அறிவுடைநம்பி,//
ஹாஹா கலக்கல் பாஸ்
கன்னி முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மிகவும் நன்றாக இருந்தது.