மீடியா வாய்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியின் முழு வடிவம்:

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவரிடம் இருந்து நம் எடிட்டோரியலுக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதன் சாராம்சம் இதுதான் :

தெய்வத் திருமகள் என்கிற படம் தமிழ்நாட்டில் ரிலீசான அன்றே அமெரிக்காவிலும் வெளியானது. தமிழ் மீடியாக்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் அந்தப் படத்தையும் அதன் இயக்குநர் விஜய்யையும் நடிகர் விக்ரமையும் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஆர்வமிகுதியால் நானும் தெய்வத் திருமகளை தரிசிக்கச் சென்றேன். அதிர்ந்தேன்.  

இயக்குநர் விஜய், தனது சொந்தக் கற்பனையால் இது போன்ற ஒரு படத்தை எடுத்திருந்தால், விக்ரம் சுயமாக நடித்திருந்தால் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது சரி. ஆனால், ஐ ச்ட் ண்ச்ட் என்கிற ஆங்கிலப் படத்தை அப்பட்டமாகக் காப்பியடித்து படம் எடுத்திருப்பவருக்கும், அதில் ஹீரோவாக நடித்த சீன் பென்னை ஜெராக்ஸ் காப்பி எடுத்து நடித்திருப்பவருக்கும் இந்த அங்கீகாரமும் பாராட்டும் தகுமா? 

யாரோ பெற்ற குழந்தைக்கு நான் தான் அப்பா என்று உரிமை கொண்டாடுவதும் அதற்கான பாராட்டுதல்களைப் பெற்றுக்கொள்வதும் அசிங்கமில்லையா? சம்பந்தப்பட்டவர்களுக்கு வெட்கம் இருக்கிறதோ இல்லையோ, இப்படியொரு திருட்டு நடந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்.

- என்று அமெரிக்க நண்பர் மிக மிகக் காட்டமாக தன் கருத்துக்களைக் கொட்டியிருந்தார் அந்த ஈ.. சாரி தீ-மெயிலில். அவரின் மெயிலில் இருந்த கோபமும் நியாயமும் நம்முள்ளும் பல கேள்விகளை எழுப்பியது. 

உலகத் திரைப்படங்களைக் காப்பியடிப்பது இன்றைக்கு ஒரு டிரெண்டாகவே கோலிவுட்டில் உருவாகிவிட்டதா? சொந்தமாக யோசிக்க முடியாமல் போனதற்குக் காரணம் நம்மவர்களின் சோம்பேறித்தனமா? அல்லது யாருக்கு இதெல்லாம் தெரியப்போகிறது என்கிற அலட்சியமா? கற்பனையும் படைப்புத்திறனும் கொண்ட கதாசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி திரையுலகை ஒரு ரவுண்ட் அடித்தோம். நமக்குக் கிடைத்த பதில்கள் எதுவும் மகிழ்ச்சி தருவதாக இல்லை. 

கோலிவுட்டில் புதிதாக ஒரு படம் ரிலீசானால் எத்தனை காப்பி (பிரிண்ட்கள்) போடுகிறார்கள் என்று விசாரிப்பதுதான் மரபு. ஆனால், இப்போதெல்லாம் இந்தப் படம் எந்தப் படத்தின் காப்பி என்றுதான் விசாரிக்கிறார்கள். அந்த அளவுக்கு ணீடூச்ஞ்டிச்ணூடிண்ட் என்கிற விசித்திரமான வியாதி நம் தமிழ்த் திரையுலகினரை கடுமையாகத் தாக்கியிருக்கிறது.

இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்தவரின் படைப்புகளை, சிந்தனைகளை, எண்ணங்களைத் திருடி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவார்கள்.  ஆனால், அதற்கான குற்றயுணர்ச்சி ஏதுமின்றி, கொஞ்சம் கூட வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல், இந்தப் படைப்புக்காகவே மூன்று வருடங்கள் வாழ்ந்தேன், படுத்து உருண்டேன், பல் துலக்கினேன் என்றெல்லாம் பேட்டி தருவார்கள். 

உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குக் கீழே ஒரு பெரிய அசிஸ்டெண்ட் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்கள். அந்த அசிஸ்டெண்ட்களுக்கு கொடுக்கப்படுகிற அசைன்மெண்ட் இதுதான்: 

உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அல்லது பெரிய அளவில் போற்றப்பட்ட அல்லது பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய படங்களை நெட்டில் வலை வீசி தேடவேண்டும். அவற்றின் பெயர்களைக் குறித்து வைத்துக்கொண்டு பர்மா பஜார், மவுண்ட் ரோட் என ஆளுக்கொரு திசையாக அலைந்து திரிய வேண்டும். இப்போது அந்தச் சிரமம் கூட இல்லை.

வெளிநாட்டுப் படங்களின் சிடிக்களை விற்பனை செய்யும் தொழில் இன்றைக்கு கத்திரிக்காய், வெண்டைக்காய் வியாபாரம் போல் ஆகிவிட்டது. தெருவுக்கு தெரு இத்தகைய கடைகள் முளைத்துவிட்டன. ஹாலிவுட் படங்கள் என்றில்லை. கொரியா, ஜப்பான், ஃபிரான்ஸ், இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, ஈரான் என பிற நாட்டு படங்களும் இங்கு சல்லிசான விலையில் கிடைக்கும். ஆனால் என்ன, நமக்குத் தேவையான சிடிக்கள் கிடைக்க கொஞ்சம் மெனக்கெட்டு தேட வேண்டும். அவ்வளவுதான்.

டிஸ்கஷன் என்ற பெயரில் இயக்குநரும் அவரது உதவியாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து தேடலில் கிடைத்த அத்தனை படங்களையும் பார்த்துவிடுவார்கள். அதில், தமிழ்ச் சமூகத்துக்கு பொருந்தி வரக்கூடிய கதை அல்லது யூனிவர்சல் சப்ஜெக்ட் என்ற தகுதியில் எந்த நாட்டில் எடுத்தாலும் எடுபடும் என்ற அடிப்படையில் அமைந்த கதை எது என்று விவாதிப்பார்கள். 

எந்தக் கதையை படமாக எடுப்பது சாரி, சுடுவது என்று முடிவானவுடன் அதில் இரண்டு மூன்று கேரக்டர்களை எக்ஸ்ட்ராவாக சேர்ப்பார்கள். காமெடி டிராக்கையும் பாடல்களுக்கான லீடையும் பிடிப்பார்கள். பின்னே, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்க வேண்டுமல்லவா? அதற்குப் பின்னர், ஒன்லைனைப் போட்டு, நடிகர்களைத் தேர்வு செய்து ஷுட்டிங் போய்விடுவார்கள். 

ஐந்து அல்லது ஆறே மாதத்துக்குள் உலகத் திரைப்படங்களுக்குச் சவால் விடும் ஒரு தமிழ்ப்படம் ரெடி! 

கோலிவுட்டில் பல படங்கள் இப்படித்தான் உருவாகின்றனவா என்று விசாரித்தால் ஆமாம் பாஸ் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் முன்னணி இயக்குநர் ஒருவர். தெய்வத் திருமகள் ஆஹா ஓஹோவென்று புகழப்படுவது அவருக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் எவ்வளவோ வற்புறுத்தியும் தனது பெயரைக் கண்டிப்பாகப் போடக்கூடாது என்ற கண்டிஷனோடுதான் பேச ஆரம்பித்தார் அவர்.

விஜய் எடுத்த படத்தை காவியம் கீவியம்னு புகழறாங்க. அப்படி புகழறவங்க முதல்ல ஐம் சாம் படத்தைப் போய் பார்க்கட்டும். படத்தில இருந்து அப்படியே 80 சதவீதம் அடிச்சிருக்காங்க பாஸ். இதில என்ன ஒரிஜினாலிட்டி இருக்கு?

விக்ரமும் தன் பங்குக்கு நல்லா காப்பியடிச்சிருக்காரு. அவரோட ஹேர்ஸ்டைல், பாடி லாங்வேஜ், வாயைத் தொறந்து வச்சுக்கிட்டு பேசற விதம் எல்லாமே சீன் பென்கிட்ட இருந்து சுட்டதுதான். விக்ரம், சீன் பென்னைப் பார்த்து பார்த்து பிராக்டிஸ் பண்ணியிருக்க வேண்டிய அவசியமே இல்ல.

மன வளர்ச்சி குன்றியவரா ஒரு அப்நார்மல் கேரக்டர்ல நடிக்கறது ரொம்ப சுலபமான விஷயம். சேது, அந்நியன், பிதாமகன்ன்னு அவரே நெறைய அப்நார்மல் கேரக்டர்ஸை பண்ணிட்டாரு. அதே கேரக்டர்ஸைதான் திரும்ப திரும்ப வேற வேற ஸ்டைல்ல பண்றாரே தவிர அவரும் புதுசா ஒண்ணும் கிழிச்சிடலை. இந்த லட்சணத்தில நெறைய ஹோம் ஒர்க் பண்ணினேன்; கேரக்டர்ஸை ஸ்டடி பண்ணினேன்னு அவர் கொடுக்கற பில்ட் அப்லாம் ரொம்ப ஓவர்.

ஜீ.வி பிரகாஷ் மட்டும் இவங்களுக்கு சளைச்சவரா என்ன? ரோஜர் மில்லரோட விசில் ஸ்டாப் டிராக்கை அப்படியே பயன்படுத்தியிருக்காரு இந்த இசை சுனாமி. பப்ப பாப்பன்னு ஆரம்பிக்கற பாட்டு, 1973-ல வந்த ராபின் ஹுட் படத்தோட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக். அமன், அயன் அலிகானோட ட்ரூத் பாட்டை ஜகடதோமா போட்டுத் தந்திருக்காரு. கூட்டமா சேர்ந்து கொள்ளை அடிக்கறதை கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா? இந்தப் படத்தில அதுதான் நடந்திருக்கு என்று தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துவிட்டார் அவர். 

தெய்வத் திருமகள் என்பது தமிழ்த்திரையிலகின் சமீபத்திய கரும்புள்ளி. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் இது போன்ற பல கரும்புள்ளிகள் வெளிவந்திருக்கின்றன (அவை தனியாக அட்டவணையில் தரப்பட்டுள்ளன). இதில் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில், பிற நாட்டுப் படத்தை கார்பன் காப்பி செய்த யாரும் ஒரு courtesy  அடிப்படையில் கூட இந்தப் படத்தின் கதை, குறிப்பிட்ட படத்தின் கதையைத் தழுவியது என்ற அறிவிப்பையோ அல்லது மூலக்கதைக்கு நன்றி சொல்லும் நாகரிகத்தையோ கடைப்பிடிக்கவில்லை என்பதுதான். 

இந்தப் போக்கு தமிழ்த் திரையுலகுக்கு ஆரோக்கியமானதுதானா என்று மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.செல்வராஜிடம் கேட்டோம். பாரதிராஜாவுக்கு முதல் மரியாதை, மணிரத்னத்துக்கு அலைபாயுதே போன்ற சூப்பர் ஹிட் கதைகளைக் கொடுத்தவர் அவர்.

யாரோ என்னவோ செஞ்சிட்டு போகட்டும் சார். அதைப் பத்தி எனக்கென்ன? தேவையில்லாம எனக்கு இதுக்கு இந்த வம்பு என்று விரக்தியும் கடுப்புமாகப் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் ஆர். செல்வராஜ். கன்னடத் திரையிலகில் தற்போது மிகவும் பிசியாக அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் தன்னை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் அவரது பேச்சில் தெரிந்தது.

வெளிநாட்டுப் படங்களைக் காப்பியடிப்பது பற்றி இளைய தலைமுறை இயக்குநர்களிடம் விசாரித்தால், யாருமே வெளிப்படையாக வாய் திறக்க மறுக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ இந்தப் போக்கை ஆதரிக்க வேண்டிய அல்லது அதை எதிர்த்துப் பேச முடியாத நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் ஆளாகி இருக்கிறார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.

கிகுஜிரோ படத்தை காப்பியடித்து மிஷ்கின் நந்தலாலா படத்தை எடுத்தது குறித்து ஒரு தனியார் சேனல் கருத்து கேட்டபோது, அவர் தப்பான விஷயத்தை ஸ்கிரீன்ல காட்டலையே. ஒரு நல்ல விஷயத்தைத்தானே கொண்டு வந்தாரு என்று சேரன் தனது நண்பருக்காக வக்காலத்து வாங்கினார். சோட்ஸி என்கிற ஆப்பிரிக்கப் படத்தின் அக்மார்க் தமிழ்ப் பதிப்பான யோகி படத்தைத் தயாரித்ததன் மூலம் அமீரும் இதற்கான ஆதரவைத் தெரிவித்துவிட்டார்.

பார்த்திபன் கனவு, மந்திரப்புன்னகை போன்ற வித்தியாசமான படங்களைத் தந்த கரு.பழனியப்பனும் இதை எதிர்க்கவில்லை. என்னை மாதிரி இயக்குநர்கள் எல்லாம் ஏற்கெனவே வந்த தமிழ்ப்படங்களைக் காப்பி அடிச்சு படங்கள் பண்றோம். சில பேர் வெளிநாட்டுப் படங்களைக் காப்பி பண்றாங்க. இது நல்ல வளர்ச்சிதானே என்கிறார். அவர் கிண்டலாகப் பேசுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்தச் சிந்தனைத் திருட்டை எதிர்த்து ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போடக்கூட திரையுலகைச் சேர்ந்தவர்கள் தயாராக இல்லை என்கிற நிலையில் ஐடி துறையைச் சேர்ந்த ராஜேஷும், ஹாலிவுட் பாலாவும் பூனைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே சினிமாவின் ஆத்மார்த்த ரசிகர்கள். நல்ல படங்கள் குறித்து இணையத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள். ராஜேஷ் பெங்களூருவிலும் ஹாலிவுட் பாலா அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். ராஜேஷ், கருந்தேள் என்ற பெயரில் ஒரு பிளாக்கை ஆரம்பித்து தான் பார்த்த, தன்னை பாதித்த சினிமாக்கள் குறித்து எழுதி வருகிறார்.

இந்தத் தகவல்களை விட இவர்கள் செய்திருக்கும் வேலைதான் மிகவும் சுவாரசியமானது. ஐம் சாம் படத்தை காப்பி அடித்து தமிழ்நாட்டில் இப்படியொரு படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான நியூலைன் சினிமாவுக்கு ஒரு மெயிலைத் தட்டியிருக்கிறார் ஹாலிவுட் பாலா. அதே நேரத்தில், விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்வேலாயுதம் படத்தின் போஸ்டர் டிசைன்களும் அதன் டிரைலரும் Assassins Creed என்கிற கேமில் இருந்து அப்பட்டமாகத் திருடப்பட்டிருக்கிறது என அந்த கேம்ஸை உருவாக்கிய அப்சாஃப்ட் நிறுவனத்துக்கு மெயில் தட்டியிருக்கிறார் கருந்தேள். 

முன்னரே பேசி வைத்துக்கொள்ளாமல் தற்செயலாக ஒரே நேரத்தில் இருவரும் இந்த மெயில்களை அனுப்பியிருப்பதுதான் ஆச்சர்யம்.

கருந்தேளைப் போனில் பிடித்து, தமிழ் சினிமாவின் மேல் அப்படியென்ன உங்களுக்குக் கோபம் என்றோம். 

யார் மேல நமக்கு அதிக அன்பு இருக்கோ அவங்க மேலதான் நாம அதிகமா கோபமும் படுவோம். இது நெருக்கமும் உணர்வும் சம்பந்தப்பட்ட விஷயம். நாங்க ரெண்டு பேருமே சினிமாவை ரொம்ப நேசிக்கிறவங்க. முதல் மரியாதை, ஆரண்யகாண்டம், யுத்தம் செய்னு நல்ல படங்கள் தமிழ்ல வர்றப்ப எங்களுக்கு சந்தோஷமா, பெருமையா இருக்கு. அது மாதிரியான படைப்புகள் கோலிவுட்ல நிறைய வரணும்னு நாங்க விரும்பறோம்.

ஆனா, சொந்தமா யோசிக்க முடியாம, ஃபாரின் படங்களை காப்பியடிச்சு படம் எடுத்துட்டு அதை அவங்களே கஷ்டப்பட்டு கிரியேட் பண்ணின மாதிரி பேசறதைத்தான் எங்களால ஜீரணிக்க முடியலை. அடுத்தவரோட பொருளையோ அல்லது பணத்தையோ அபகரிச்சு அதை தன்னுடையதுன்னு ஒருத்தன் சொந்தம் கொண்டாடினா அதை திருட்டுன்னு சொல்றோம். அப்படின்னா அடுத்தவரோட படைப்பையும் சிந்தனையையும் அபகரிச்சு அதுக்கு சொந்தம் கொண்டாடறதுக்கு பேரும் திருட்டுதானே. 

இதுக்கு இன்ஸ்பிரேஷன், தழுவல்ன்னு நீங்க எப்படி பேர் வச்சாலும் சரி. திருட்டு திருட்டுதான். வேற எந்த ஃபீல்டிலயும் இப்படி காப்பி அடிக்கற வேலையை தைரியமா செய்ய முடியாது. உடனே கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்துடுவாங்க. ஆனா, சினிமாவில மட்டும்தான் இந்தக் கூத்து எந்தப் பிரச்னையும் இல்லாம தைரியமா, வெளிப்படையா  நடந்துட்டிருக்கு. எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் யாருமே இல்ல.

நான் சிம்பிளா ஒரு கேள்வி கேக்கறேன் சார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களை தமிழ்ல எப்படி ரீமேக் பண்றீங்க? முறையா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்ட ரைட்ஸ் வாங்கிட்டுத்தானே படம் எடுக்கறீங்க. ஆனா ஃபாரின் படங்களை ரீமேக் பண்ணும்போது மட்டும் ஏன் அந்த முறையான வழியை கடைப்பிடிக்க மாட்டேங்கறீங்க? 
ஏன்னா இங்க அப்படி ரைட்ஸ் வாங்காம படம் எடுத்தா சம்பந்தப்பட்டவங்க கேஸைப் போட்டு உண்டு இல்லைன்னு செஞ்சிடுவாங்க. ஆனா, வெளிநாட்டுப் படங்களைத் திருடி படம் எடுத்தா அது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தெரியவே போறதில்லை. அந்தத் தைரியத்திலதான இந்த மாதிரி காப்பியடிக்கறீங்க?

போன தலைமுறை மக்களுக்கு இதப்பத்தில்லாம் தெரியலை. அதனால கேள்வி கேக்கலை. இப்பதான் எல்லாரும் எல்லா விஷயங்களையும் நெட் மூலமா தெரிஞ்சிக்கறாங்களே. அது தெரிஞ்சதுக்கப்புறமும் நீங்க இப்படி திருடறது எந்த விதத்தில நியாயம் சார்? 

பிற நாட்டில இருக்கற நல்ல படங்களை தமிழுக்கு கொண்டு வர்றது நல்ல விஷயம்தானேன்னு பல பேர் சொல்றாங்க. அவங்க வாதம் சரின்னா நான் ஒண்ணு செய்யறேன். தவமாய் தவமிருந்துன்னு ஒரு நல்ல படம் வந்துச்சு. நல்ல விஷயத்தை திருப்பி சொல்றது நல்ல விஷயம்தானேன்னு சீன் பை சீன் அந்தப் படத்தை நான் அப்படியே எடுத்தா சேரன் அதை ஏத்துக்குவாரா? 

இந்த மாதிரி பூசி மெழுகி காரணம் சொல்றதெல்லாம் சரி வராது. இந்தத் திருட்டு தடுக்கப்படணும். இதைப் பத்தின விழிப்புணர்வு எல்லாருக்கும் வரணும். அதுக்காகத்தான் எங்களால முடிஞ்ச வேலையை நாங்க பண்ணிட்டிருக்கோம் என்று ஆவேசமும் ஆதங்கமும் பொங்க பேசினார் கருந்தேள்.

இன்றைய இயக்குநர்கள் மேல் கோபம் இருந்தாலும் அவர்கள் மேல் அதீத நம்பிக்கையும் இருக்கிறது இவர்களிடம். 

சீரியஸா உட்கார்ந்து யோசிச்சா போதும் சார். நம்ம இயக்குநர்களால நல்ல படங்களை உருவாக்க முடியும். ஆனா எல்லாருமே வேகமா வெற்றியை ருசிக்கணும், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படறாங்க. அந்த பேராசையாலதான் சொந்தமா யோசிக்க நேரம் செலவழிக்க முடியாம, ஏற்கெனவே ஹிட்டான படத்தை சுட்டு படம் எடுக்கறாங்க. குறுகில காலத்தில வெற்றி அடையணுங்கற அவங்க ச்ttடிtதஞீஞு மாறினா இந்த நிலைமையும் மாறும். அவங்க மாறுவாங்களா? என்று ஏக்கத்தோடு கேட்கிறார் அவர். 

இவர்கள் அனுப்பிய மெயிலுக்கு இன்னும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம். 

ஆனா அதுக்காக நாங்க விடப்போறதில்ல சார். தொடர்ந்து இந்தக் காரியத்தை செய்யத்தான் போறோம். இனிமே யார் காப்பி அடிச்சு படம் எடுத்தாலும் சரி, அதோட ஒரிஜினல் புரட்யூசருக்கு நாங்க கண்டிப்பா மெயில் அனுப்புவோம். எங்க முயற்சியோட அடுத்த கட்டமா, அமெரிக்காவிலுள்ள மீடியாக்களோட கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு போயிருக்கோம். 

முறையான உரிமம் இல்லாம இந்த மாதிரி படம் எடுத்தா ஹாலிவுட்ல பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போடுவாங்க. அது மாதிரி இங்க இருக்கற யாராவது ஒரு புரட்யூசர் மேல கேஸ் விழுந்தா போதும். தானா வழிக்கு வந்துடுவாங்க என்கிறார் கருந்தேள் நம்பிக்கையாக. 

அவரது நம்பிக்கை பலித்தால் தமிழ் சினிமாவுக்கு மிகவும் நல்லது. 

ஃபாரின் படங்களைத் தழுவி படம் எடுப்பதற்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் இயக்குநர்கள் முன் வைக்கும் வாதம் இது:

யாருமே ஒரிஜினலா எதையும் கிரியேட் பண்ண முடியாது சார். ஒண்ணில இருந்துதான் இன்னொண்னு வரும்.இசை, படம், கதை எதுவா இருந்தாலும் ஏற்கெனவே பார்த்த பாதிப்பில் இருந்துதான் புதுசா ஒண்ணை கிரியேட் பண்ண முடியும். இதை காப்பின்னு சொல்ல முடியாது. இன்ஸ்பிரேஷந்தான்னு சொல்லணும். 

இன்ஸ்பிரேஷன் என்பது ஒருவரின் மேன்மையான படைப்பைப் போலவே மற்றொன்றை கிரியேட் செய்வது; அவருடைய படைப்பை அப்படியே திருப்பி உருவாக்குவதல்ல என்று நாம் பதில் விளக்கம் அளித்தால் கோபப்படுகிறார்கள்.

வெளிநாட்டுப் பழங்களைத் தழுவி படம் எடுக்கறதை நாங்க ஒண்ணும் புதுசா கண்டுபிடிக்கலை சார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே இது இருந்துட்டிருக்கு. நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், கலங்கரை விளக்கம்லாம் ஆங்கிலப் படத்தோட தழுவல்தான். கேபியோட பல படங்களையும் இதுக்கு உதாரணமா சொல்லலாம். பாரதிராஜாவோட பதினாறு வயதினிலே ரேயான்ஸ் டாட்டர்ங்கற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். சிவப்பு ரோஜாக்களும் அப்படித்தான். மணிவண்ணனோட சின்னதம்பி பெரிய தம்பி, நூறாவது நாள், 24 மணி நேரம் இதெல்லாம் கூட ஹாலிவுட் படங்களையும் ஆங்கில நாவல்களையும் தழுவி எடுக்கப்பட்டவைதான். 

காலம் காலமா இது நடந்துட்டுத்தான் இருக்கு. அன்னிக்கு டெக்னாலஜியும் மீடியாவும் வளராததால மக்களுக்கு இதெல்லாம் தெரியலை. இன்னிக்கு சிஸ்டம் முன்னால உக்காந்தா உலகத்தில நடக்கற எல்லா விஷயமும் தெரிஞ்சிடுது. அதோட, உலகத் திரைப்படங்களை பாக்கற வாய்ப்பு சினிமா ஆட்களுக்கு மட்டும் இல்லாம சாதாரண ஜனங்களுக்கும் கிடைக்குது. அதனாலதான் நீங்க இப்படி கேள்வி கேக்கறீங்க. நீங்க என்ன பண்ணினாலும் இதை மாத்த முடியாது. சினிமா இருக்கற வரைக்கும் இது தொடர்ந்துட்டுதான் இருக்கும். 

8 பேர் சொல்றாங்க...

  1. இதுல கருந்தேள் சொன்னது என்று வருவதெல்லாம் கச்சிதமா அவர் சொன்ன வார்த்தைகள் தான ????

  2. பாலா என்ன சொல்றாருன்னா:

    எனக்கு முழு கட்டுரையிலும் கருந்தேளின் பாதிப்பு தெரிஞ்சது.

  3. பாலா என்ன சொல்றாருன்னா:

    //இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவரிடம் இருந்து நம் எடிட்டோரியலுக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது.//

    இது இன்னொரு மிஸ்ட்ரி

  4. // இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவரிடம் இருந்து நம் எடிட்டோரியலுக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது //

    யாரது ? பா வில் ஆரம்பித்து லா வில் முடியும் பெயர் கொண்ட பெருந்தகையா ???

  5. எஸ்.கே என்ன சொல்றாருன்னா:

    சம்பந்தபட்ட படக்கம்பெனியிடமிருந்து ஏதேனும் பதில் வந்ததா?

  6. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    ஆக்சுவலா, அந்த ஒரு மணி நேரப் பேச்சின் சில excerpts இவை. கட்டுரையோட நீளம் கருதி, வெட்டப்பட்டு விட்டன. பாலா மற்றும் என்னோட போட்டோ வெளியிடாததற்கு அந்த நண்பர் மிகுந்த வருத்தம் தெரிவிச்சாரு நேத்து. அடப்போங்க பாஸ் . . மேட்டர் வெளிய வந்ததுதான் முக்கியம்.. போட்டோ கீட்டோவேல்லாம் தேவையேயில்லன்னு சொல்லிட்டேன். ஆனா இனி அவருகிட்ட இருந்து முழு ஆதரவு இந்த முயற்சிகளுக்கு இருக்கும்னு கன்பார்ம் பண்ணிருக்காரு.

  7. பாலா என்ன சொல்றாருன்னா:

    //சம்பந்தபட்ட படக்கம்பெனியிடமிருந்து ஏதேனும் பதில் வந்ததா?//

    இதைப்பத்தி இப்போதைக்கு சொல்ல விரும்பலைன்னு எத்தனை நாளைக்கு ஜல்லி அடிக்கிறது. ‘என் சைடில் இதுவரை எந்த பதிலும் வரலைங்கறதுதான் உண்மை’.

    ஆனா கருந்தேளின் ரிடம்ஷன் உதாரணம்தான் என் பதிலும். அது நிஜமாவே அருமையான எ.கா!!

    அதனால்.. இப்ப, hollwood.com, hollywoodreporter.com -ன்னு ஒன்னு விடாம அந்த மெயிலை இன்னும் டீடெய்ல்லா ஃபார்வேட் பண்ணிகிட்டு இருக்கேன்.

    win or lose, don't care. நாளைக்கு.. சரித்திரம் பூகோளம்னு எதுலயாவது இதை யாராவது சொல்லுவாங்கல்ல. :)

    அப்புறம்.. நாம ஏன் இந்த மாதிரி படங்களின் Wiki பேஜை அப்டேட் பண்ணக் கூடாது. நம்மோட முயற்சிகளை... முடிஞ்சா முதல் பாராவிலேயே போடுவோம்.

    What u think?

  8. Katz என்ன சொல்றாருன்னா:

    //டிஸ்கஷன் என்ற பெயரில்//

    itharkku veru arthamaame

Leave a Reply