Prequeal
கொலம்பஸ்ஸும் அமெரிக்கோ வெஸ்புகியும் அமெரிக்க நிலப்பரப்புகளை கண்டறிந்த பின் கடற்வழி பயணங்களும் புதிய நிலப்பகுதிகளை கண்டறிவதும் அதிகமானது. மேலும் பல நாடுகள் தங்களது குடியேற்றங்களை(காலனிகள்) ஆங்காங்கே அமைக்கத் தொடங்கின. பிரிட்டிஷ் அரசாங்கமும் அப்படி காலனிகளை உருவாக்க ஆரம்பித்திருந்த சமயம் அது.

சர் வால்டர் ரெலேய்
ராணி ஒன்றாம் எலிசபெத் 
   
                 
அப்படி காலனி அமைக்க இடம் தேடி சர் வால்டர் ரெலேய் (Sir Walter Raleigh) என்பவரால் அனுப்பப்பட்ட கேப்டன்களான பிலிப் அமடஸ் (Philip Amadas) மற்றும் ஆர்தர் பார்லோவ் (Arthur Barlowe) ஆகியோர்  1584ஆம் ஆண்டு ரோனோக் தீவை கண்டறிந்தனர். அந்த தீவின் அழகு அவர்களை கட்டிப் போட்டது. அந்த தீவின் மண்ணும் மலைகளும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அவர்களுக்குத் தோன்றியது. மேலும் அங்கிருந்த பழங்குடியினரும் அவர்களுடன் அன்பாக பழகினார்கள், உபசரித்தார். இது காலனி அமைக்க ஏற்ற இடம் என முடிவு செய்த அவர்கள் இரு செவ்விந்திய பழங்குடியினரை அழைத்துக் கொண்டு பிரிட்டன் திரும்பினர்.

EPISODE 1:
புதிய நிலத்தை கண்டறிந்ததற்காக ராணி ஒன்றாம் எலிசபெத் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதற்கு காரணமான சர் வால்டர் ரெலேய் (Sir Walter Raleigh)-ஐ பாராட்டினார். ரெலேயின் வற்புறுத்தலுக்கிணங்க அந்த புதிய நிலப்பரப்பில் காலனி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நிலப்பரப்பிற்கு ராணியின் நினைவாக விர்ஜினியா (Virgin Queen – Elizabeth I) என பெயர் வைக்கப்பட்டது. 1585ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பக்கம் இருந்த ரோனோக் (Roanoke) தீவுக்கு காலனி அமைக்க 100 பேர் கொண்டஒரு குழு அனுப்பட்டது.

   
                                   சர் ரிச்சர்ட் கிரீன்வில்லி                       சர் ரால்ஃப் லேன்                                   

குழு தீவில் இறங்கியதும் மெல்ல மெல்ல காலனியை அமைக்கத் தொடங்கியது. கடற்கரையோரமாக ஒரு துறைமுகத்தை (Fort Raleigh) கட்டினார்கள். ரெலெய் அவர்களிடம் சொன்னது: பழங்குடியினரை மரியாதையாக நடத்த வேண்டும். அவர்களை அடிமைப்படுத்தக்கூடாது, அவர்களின் சொத்துக்களை நாசம் செய்யவோ அபகரிக்கவோ கூடாது. ஆனால் அந்த குழுவின் அட்மிரல் ரிச்சர்ட் கிரீன்வில்லியும் (Richard Grenville),  கவர்னர் ரால்ஃப் லேனும் ( Ralph Lane) அதை காற்றில் பறக்க விட்டனர்.

செவ்விந்தியர்களின் குடியிருப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேவைப்பட்டதை எடுத்துக் கொள்ளுதல், அவர்களை அடித்தல் என முறையின்றி நடந்துகொண்டனர். ஒரு முறை தன் தண்ணீர் குடிக்கும் வெள்ளிக் கோப்பை காணாமல் போனதற்கு செவ்விந்தியர்களின் குடியிருப்பை எரிப்பேன், அவர்கள் தலைவனை கொல்லுவேன் என கிரீன்வில்லி கத்தி கோப்பப்பட்டார் என்றால் அவர்களின் குணத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
துறைமுகம்

அவர்கள் கொண்டு வந்த உணவு குறைவுதான். இந்நிலையில் உணவிற்காக அவர்கள் செவ்விந்தியர்களைத்தான் நம்பியிருக்க வேண்டியிருந்தது. அந்நிலையிலும் அவர்களின் துஷ்பிரேயோக எண்ணம் மறையவில்லை. உணவு இருப்பு குறைந்ததால் அதன் பொருட்டு கிரீன்வில்லி இங்கிலாந்து சென்றார். அதன் முழுப் பொறுப்பும் ரால்ஃப் லேனிடம்தான் வந்தது. லேன் கிரீன்வில்லிக்கு சற்றும் சளைத்தவரல்ல. கிரீன்வில்லி வாயால் சொன்னார், ஆனால் லேன் அதை செய்தே முடித்தார். ஆம் கிரீன்வில்லி இங்கிலாந்திலிருந்து வராமல் தாமதமாகவே, உணவிற்காக செவ்விந்தியர்களின் குடியிருப்புகளில் புகுந்து அவர்களை அடித்துப் போட்டு கொள்ளையடித்தார் லேன். அவர்களின் குடியிருப்புகளை எரித்தார். செவ்விந்தியர்களின் தலைவனை கொன்றார். ஆனால் கலவரம் அதிகமாகவே உயிருக்கு பயந்து மீதமுள்ள வீரர்களுடன் துறைமுகத்திற்கு வந்து ஒளிந்து கொண்டார்.

     
பழங்குடியினரும் அவர்கள் கிராமங்களும்

பயந்து ஒளிந்து கொண்டிருந்த சில நாட்களில் சர் ஃபிரான்சிஸ் ட்ரேக் என்பவர் கப்பலுடன் அத்தீவு பக்கம் வர இவர்கள் அங்கே தஞ்சம் புகுந்து இங்கிலாந்து திரும்பினர். கிரீன்வில்லி தன் கப்பலோடு அந்த தீவுக்கு வந்து சேர்ந்தபோது யாருமில்லாததைக் கண்டு துறைமுகத்தை பாதுகாக்க மட்டும் 15 வீரர்களை அங்கே விட்டு விட்டு மீண்டும் இங்கிலாந்து கிளம்பினார். சில முட்டாள்தனமான செயல்களால் காலனி அமைக்கும் அந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது.

EPISODE 2:
முதல் காலனி முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் 1587ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காலனி அமைக்கலாம் என ரோனோக் தீவுக்கு 121 புதிய நபர்களை அனுப்பி வைத்தார் ரெலேய். ஆனால் அங்கே தங்களக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிவாங்க காத்திருந்தார்கள் க்ரோட்டான் செவ்விந்தியர்கள்.

புதிய காலனிக்கு தலைமை ஏற்று சென்றவர் கவர்னர் ஜான் ஒயிட். அவரோ அல்லது அவரின் குழுவினரோ செவ்விந்தியர்களுடன் வன்முறையில் ஈடுபடும் எவ்வித எண்ணமும் இல்லாமல்தான் அந்த தீவில் இறங்கினார்கள்.

தீவில் இறங்கியதும் கிரீன்வில்லி விட்டுச் சென்ற 15 வீரர்களை தேடினார்கள். முடிவில் அவர்களை செவ்விந்தியர்கள் கொன்றிருந்தது தெரியவந்தது.  இருந்தபோதும் அவர்களுக்கு வேறு வழியில்லை. அங்கே பழுதடைந்திருந்த துறைமுகத்தை சீர் செய்து தங்கள் வாழ்க்கையை துவங்கினார்கள் அவர்கள்.
 
ஜான் ஒயிட் அந்த தீவிற்கு தன் மகள், மருமகனுடன்தான் வந்திருந்தார். மகள் அப்போது கர்ப்பமாய் இருந்தாள். தீவிற்கு வந்த சில நாட்களில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆகஸ்டு 18, 1587 புதிய மண்ணில் பிறந்த முதல் பிரிட்டிஷ் குழந்தைக்கு விர்ஜினியா என பெயரிடப்பட்டது. ஆனால் சந்தோசம் நீடிக்கவில்லை…

அத்தீவில் பலவித பழங்குடியினர் இருந்தார்கள். அதில் க்ரோட்டன் செவ்விந்தியர்களைத்தான் முந்தைய காலனியர் கொடுமை செய்திருந்தனர். அவர்களின் பழிவாங்கல் இந்த குழுவிடம் தொடர்ந்தது. அச்சமயம் பிரிட்டிஷ்-ஸ்பானிஷ் போர் நடந்து கொண்டிருந்ததால் இங்கிலாதிலிருந்து உணவு வரத்து கிடைக்கவில்லை. இதனால் இந்த காலனியர் அமைதியான முறையில் தீவுகளில் மீன்பிடித்து உணவுத் தேவையை தீர்த்துக் கொண்டனர். ஆனால் அப்படி போகும்போது பழங்குடியினருடன் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. ஒருமுறை தனியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த காலனி நபர் ஜார்ஜ் ஹோவ் என்பர் அந்த பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.

ஜான் ஒயிட்

நாளுக்கு நாள் உயிர்பயம் அதிகமானதால் உதவி கேட்பதற்காக கவர்னர் ஜான் ஒயிட் தன் மகள், மருமகள், பேத்தி உட்பட 90 ஆண்கள், 17 பெண்கள் மற்றும் 11 குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு உதவி கேட்பதற்காக இங்கிலாந்து திரும்பினார். அவர்கள் யாரையும் இனி பார்க்க போவதில்லை என அவருக்குத் தெரியவில்லை…

EPILOGUE:
ஒயிட் இங்கிலாந்து சென்ற சமயம் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. இதனால் மூன்று ஆண்டுகளுக்கு உணவுத் தேவையை வழங்கவில்லை இங்கிலாந்து அரசு. கடுமையாக போராடி அனுமதி வாங்கி 1590ல் ரோனோக் தீவுக்கு கிளம்பினார் ஜான் ஒயிட். சரியாக தன் பேத்தியின் 3வது பிறந்தநாளன்று ரோனோக் தீவுக்கு வந்திறங்கினார் ஒயிட்.



அங்கே தீவு பாலைவனமாக காட்சியளித்தது. அங்கே ஒருவர் கூட இல்லை. அங்கிருந்த வீடுகள் எல்லாம் மாயமாய் மறைந்திருந்தன. போராட்டம் நடந்ததிற்கான ஒரு சிறு அறிகுறி கூட இல்லை. யாருடைய உடல்களும் இல்லை.. எல்லோரும் எங்கே? ஒரு பலகையில் "Croatoan" என்றும் ஒரு மரத்தில் "Cro" என்றும் செதுக்கப்பட்டிருந்தது. வேறெந்த அடையாளமும் இல்லை. ஒயிட் செல்வதற்கு முன் தன் குழுவினரிடம் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்து வேறெங்காவது சென்றால் அந்த இடத்தை மரத்தில் செதுக்கி வைக்க சொல்லியிருந்தார். அதனால் அவர்கள் அருகிலுள்ள க்ரோட்டான் தீவுக்குச் சென்றிருக்கலாம் என தேட முயன்றார். ஆனால் கடும் பனிப்புயல் காரணமாக தேடிச் செல்ல முடியவில்லை. மறுநாள் இங்கிலாந்து திரும்பினார்.

பின்னாளில் பல காலனிகள் அங்கே வந்து இன்று அது மக்கள் வாழும் பகுதியாக மாறியுள்ளது. ஆனாலும் இந்த கேள்விக்கு இன்னமும் பதிலில்லை…அந்த 90 சொச்ச பேர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் இறந்ததற்கான தடயமே இல்லையே. அதுமட்டுமில்லாமல் வீடுகள் எல்லாம் அப்படியே மறைந்திருந்தன அவை பிரிக்கப்பட்டதற்கோ, எரிக்கப்பட்டதற்கோ எந்த அடையாளமும் இல்லை. அவர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அவர்கள் பழங்குடியினருடன் கலந்திருக்கலாம் எனவும், நோய், புயல்காற்று போன்றவற்றால் இறந்திருக்கலாம் எனவும் பல யூகங்களை பலர் முன்வைத்தனர் இத்தனைக் காலங்களில்… ஆனால் எதற்கும் ஆதாரங்கள் இல்லை.

 
இன்றைய ரோனோக் தீவு

இந்த சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஒயிட்தான். தன் குடும்பம் உட்பட தன் குழுவினர் காணாமல் போனது அவரை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த பாதிப்பிலிருந்து தன் வாழ்நாள் முடியும் வரை அவர் மீளவே இல்லை. வாழ்நாள் முழுதும் ரோனோக் நினைவாகவே இருந்தார். ரோனோக் பற்றி அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் உள்ளன. இங்கே உள்ள ஓவியங்களில் சில அவர் வரைந்ததுதான். அவர்கள் நினைவாகவே அவர் வாழ்ந்து மடிந்தார். வரலாறு இன்னமும் அவர்களுக்கு என்ன ஆனது என ஆராய்ந்து கொண்டிருக்கிறது……


-Pluto

வகைகள்:

4 பேர் சொல்றாங்க...

  1. போதைதர்மன் என்ன சொல்றாருன்னா:

    வட

    பட்ட ஜிலேபி

  2. இளங்கன்று என்ன சொல்றாருன்னா:

    வரலாறு பல செய்திகளை புதைத்து வைத்துள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  3. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் அல்வா சாப்பிடுவது போல. அட்டகாசம். தொடருங்கள் அதிரடியை.

    நிற்க. பழங்குடியினரிடம் இந்த ப்ரிட்டிஷ், ஸ்பானிஷ் ஆதிக்கவாதிகளின் பழக்கம், ஏதோ பூச்சிகளை நசுக்குபவரக்ளைப் போலவே இருந்துவந்துள்ளதைக் கவனித்திருக்கிறேன். ஆதிக்க நாடுகளாக இந்த நாடுகள் இருந்துவந்ததே காரணம். இந்தியாவில் இவர்களால் நடக்காத அக்கிரமமா? இந்த மேல்ஜாதி - ஆதிக்கவாதி மனோபாவம், இன்றும் நம் நாட்டில், வேறு ஒரு ரூபத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் கீழ்ஜாதி மக்களைக் கொல்லும் கொடுமைகள். நம்மளவிலாவது இப்படி இருக்காமல், அனைவரையும் சமமாகக் காணும் பக்குவம் வரவேண்டும்.

  4. வில்லனின் விநோதங்கள் என்ன சொல்றாருன்னா:

    மேலே லத்திகானு இருக்கு.
    கிழே ப்ளுட்டோனு இருக்கு.
    கேட்டா போஸ்ட் மார்டனிசம்னு சொல்றாங்க.

Leave a Reply